தற்கொலை செய்து கொண்ட ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தலித் இல்லை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் குற்றச்சாட்டுக்கு உள்ளான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோஹித் வெமுலா சக்கரவர்த்தி. இவர் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்தார். இவர் அம்பேத்கர் மாணவர் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் தான் அம்பேத்கர் மாணவர் அமைப்பு மற்றும் ஏபிவிபி மாணவர் அமைப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. மோதலில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இதுபற்றி விசாரணை நடத்திய பல்கலைக்கழகம் ரோஹித் வெமுலா உள்பட சிலரை சஸ்பெண்ட் செய்தது. இதையடுத்து 2016 ஜனவரி 17ல் விடுதி அறையில் ரோஹித் வெமுலா தூக்கிட்டு தற்கொலை செய்தார். இந்த சம்பவத்தை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அரசியலாக்கியது. இதனால் தலித் மாணவர் அமைப்பினர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உட்பட பலர் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது மத்திய அமைச்சர்களாக இருந்த ஸ்மிருதி இரானி, பண்டாரு தத்தாத்ரேய்யா மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினர்.
இதையடுத்து ரோஹித் வெமுலா வழக்கு தொடர்பாக நீதிபதி ரூபன்வாலா தலைமையில் கமிட்டியை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைத்தது. இந்த கமிட்டி விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையில் அறிக்கையில் ரோஹித் வெமுலா தலித் இல்லை என்றும், அவரது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை பலரும் ஏற்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் தான் 8 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் தரப்பில் ரோஹித் வெமுலா வழக்கில் உயர்நீதிமன்றத்தில் வழக்கை முடித்து வைப்பதற்கான இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ரோஹித் வெமுலா தலித் இல்லை எனவும், அவரது சாதிச்சான்றிதழ் போலியாக உருவாக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை என்பது தெரியவந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா என்பவர் மாலா சமூகத்தை சேர்ந்தவர். எனவே மாலா ஓபிசி பிரிவை சேர்ந்தவர். இதனால் தான் குழப்பம் உள்ளது. ஆனால் ராதிகா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததால் எஸ்சி என்று ரோஹித் வெமுலா அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். இதுதான் பிரச்சனையாக மாறியது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டுக்கு உள்ளான அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அப்போதைய செகந்திராபாத் எம்.பி., பண்டாரு தத்தாத்ரேயா, எம்.எல்.சி., என் ராம்செந்தர் ராவ், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்பட அனைத்து பாஜக தலைவர்களும், அப்போதைய ஐதராபாத் பல்கலைக்கழக துணைவேந்தர் பி அப்பா ராவ் உள்ளிட்டவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
போலியாக தலித் என்று அடையாளப்படுத்திக் கொண்ட ரோஹித் வெமுலாவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்தது. இதனால் பட்டியல் சமூகத்தினருக்கு பாஜக துரோகம் செய்வதாக போலியான கட்டமைப்பை உருவாக்க நினைத்த எதிர்க்கட்சிகளுக்கு நீதிமன்ற அறிக்கையில் சரியான பதிலடி கிடைத்துள்ளது.