மேற்குவங்க மாநிலம், சந்தேஷ்காலியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நில அபகரிப்பு குறித்து சிபிஐ விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் திருப்தியளிப்பதாக உள்ளது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று (மே 03) கூறியது.
மேற்குவங்கம் சந்தேஷ்காலி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளால் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். மேலும் பழங்குடியினரின் நிலங்கள் அபகரிப்பு புகார்கள் எழுந்தன. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இதையடுத்து, விசாரணை நடத்திய சிபிஐ, வேளாண் விளைநிலங்கள் சட்டவிரோதமாக மீன் வளர்ப்பு மையங்களாக மாற்றப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தியது. 900-க்கும் மேற்பட்ட நிலஅபகரிப்பு புகார்கள் இருப்பதால், மாநில அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என சிபிஐ கோரிக்கை விடுத்தது.
சிபிஐ-யின் முதல் கட்ட அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், சிபிஐ-க்கு மாநில அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க உத்தரவிட்டார். பணியாளர்கள் குறைவாக இருந்தால், கூடுதல் பணியாளர்களை இந்த பணிக்கு ஈடுபடுத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க தேசிய மனித உரிமை ஆணையம் வேண்டுகோள் விடுத்தது. இதற்கும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜுன் 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் அன்றைய தினம் சிபிஐ விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
புகார்தாரர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி சிபிஐயிடம் உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. சந்தேஷ்காலி பெண்கள் தயக்கம் இன்றி புகார்கள் தெரிவிக்க பெண் அதிகாரிகளை நியமிப்பது குறித்து சிபிஐ பரிசீலிக்க வேண்டும் எனவும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.