கர்நாடக மாநிலத்தில், பிரச்சாரத்திற்கு வந்தபோது, சிறிய பழக் கடை வைத்துள்ள பெண் வியாபாரியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் 29ம் தேதி பாராட்டிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
உத்தர கன்னடா மாவட்டத்தை சேர்ந்த மோகினி கவுடா , வனப்பகுதியில் கிடைக்கும் பழங்களை கொண்டு வந்து பேருந்து நிலைத்தில் விற்பனை செய்து வரும் தொழிலை செய்து வருகிறார். வியாபாரம் முடிந்த பின்னர் பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்திருக்க அங்கு போடப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் குப்பைகளை அகற்றுவார். இதனை அங்குள்ள ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இவரின் வீடியோ மிகப்பெரிய வைரலாகியது.
இந்த நிலையில், உத்தர கன்னடா மக்களவைத் தொகுதியில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொள்ள வருகை புரிந்தார். அப்போது அவரை வரவேற்க பாஜக நிர்வாகிகள் ஹெலிபேடு அமைந்த பகுதிக்கு சென்றனர். அப்போது அவர்களுடன் சிறப்பு விருந்தினராக பெண் பழ வியாபாரி மோகினி கவுடாவும் இடம் பெற்றிருந்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி மோகினி கவுடாவின் தூய்மைப் பணிக்காக பாராட்டினார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.