ஒரு மாத பினாயில் செலவு ரூ.55 லட்சம்: நெல்லை மாநகராட்சியின் பகல் கொள்ளை!

திருநெல்வேலி மாநகராட்சியில், தச்சநல்லூர், டவுன், மேலப்பாளையம் உள்ளிட்ட நான்கு மண்டலங்கள் உள்ளன. மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உடல் நலம் பாதிக்கப்பட்டு ஜனவரி முதல் மார்ச் வரை விடுப்பில் சென்றிருந்தார்.

மார்ச் மாதம் மாநகராட்சிக்கு, 55 லட்சம் ரூபாய்க்கு பினாயில் வாங்கியதாக பில் வந்துள்ளது. ஏப்ரலில் மீண்டும் பணி பொறுப்பேற்ற அலுவலர் சரோஜா, சந்தேகத்திற்குரிய பினாயில் உள்ளிட்ட பில்களுக்கு அனுமதி மறுத்துள்ளார்.

குறிப்பாக, மாநகராட்சியில் ஒரு மாதத்திற்கு அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய்க்கு தான் பினாயில், சுண்ணாம்பு, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட உபகரணங்களை வாங்குவது வழக்கம். ஒரே மாதத்தில் 55.35 லட்சம் ரூபாய்க்கு பினாயில் மட்டும் வாங்கிய பில் குறித்து அவர் கமிஷனர் தாக்கரேவிடம் புகார் தெரிவித்தார். கமிஷனர் தணிக்கை செய்ய அனுப்பினார். தணிக்கை மேற்கொள்ள முடியாது என, அலுவலர்கள் மறுத்து விட்டனர்.

மாநகராட்சி அலுவலர் கூறுகையில், ‘திருநெல்வேலி மாநகராட்சியில் டிச., 17, 18ல் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது கூட தூய்மை பணிக்காக இந்த அளவுக்கு பினாயில், பிளீச்சிங் பவுடர் வாங்கவில்லை. மார்ச், ஏப்ரல், ஜூன் வரையிலும் வெப்ப காலமாகும். பினாயிலுக்கு தேவையில்லை. கழிப்பறை தூய்மை பணிகளை பெரும்பான்மையாக தனியார் நிறுவனங்களே மேற்கொள்கின்றன.

‘ஒரு லிட்டர் பினாயில் 67 ரூபாய் வீதம் கூட்டுறவு பண்டக சாலையில் வாங்கியதாக பில் கொடுத்துள்ளனர். எனவே 20,000 லிட்டர் வாங்கியதாக கணக்கு கூறினாலும், 13 லட்சம் ரூபாய் தான் செலவாகி இருக்கும். 55 லட்சம் கணக்கு காண்பித்து நிதி இழப்பு ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்’ என்றார்.

நெல்லை மாநகராட்சியின் மேயராக திமுகவை சேர்ந்த சரவணன் உள்ளார். ஏற்கனவே இவர் மீது ஆளும் கட்சி எதிர்க்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் ஊழல் புகார் கூறியிருந்தனர். மேயரை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். அதில் இருந்து தப்பி மீண்டும் மேயராக சரவணன் செயல்படுகிறார். அப்படி இருக்கையில் அவர்கள் பினாயில் மட்டுமே ரூ.55 லட்சத்திற்கு வாங்கியுள்ளனர் என்றால் மற்றவைக்கு எவ்வளவு செலவு செய்திருப்பார்கள் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top