காவல்துறை உயர் அதிகாரிகளை பெண் காவலர்களுடன் தொடர்பு படுத்தி அவதூறாக பேசியதாக பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர், கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று (மே 06) சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் சந்தித்த அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை நீதிமன்றத்தில் நீதிபதியிடம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், சவுக்கு சங்கர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பும் சிறையில் அடைப்பதற்கு முன்பும் என இரண்டு முறை முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அப்போது அவரது உடலில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அவரது கைகள் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் உடலில் தடிப்பு தடிப்பு போன்ற ரத்தக் கட்டுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அடுத்த பத்து நிமிடங்களில் இருந்து சிறை காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் பிளாஸ்டிக் பைப்பில் துணி சுற்றி காவலர்கள் அவரை தாக்கியதாக சவுக்கு சங்கர் தன்னிடம் தெரிவித்ததாக கூறியதுடன், இன்று வழக்கறிஞர்கள் குழு சவுக்கு சங்கரை சந்திக்காமல் இருந்திருந்தால் அவர் வழுக்கி விழுந்ததாகவோ அல்லது வேறு விதமாகவோ சிறை துறையினர் அறிக்கை வெளியிட்டிருப்பார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் கோவை மத்திய சிறையில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாகவும் முழு உடல் தகுதியுடன் உள்ள சவுக்கு சங்கரை சிறை வளாகத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தனிப்பிரிவில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து வருவதாகவும் கூறினார்.
தமிழகம் முழுவதும் வேறு எங்கும் வழக்கு பதிவு செய்யாமல் ஏற்கனவே கடலூர் சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டு இருந்த பொழுது அங்கு மனித உரிமை மீறல் நடைபெறுவதாக அப்போதைய கடலூர் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மீது சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்ததாகவும், தற்போது அதே செந்தில்குமார் கோவையில் உள்ள நிலையில் திட்டமிட்டே சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த சூழலில் நீதிபதி கோவை மத்திய சிறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தற்போது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் உரிய சட்ட நடவடிக்கை மூலமே அங்கு நடைபெறும் மனித உரிமை மீறலை தடுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை சவுக்கு சங்கரை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் பலமாக தாக்கி உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
நீதிபதி நேரில் சென்று பார்க்க வேண்டும் என சவுக்கு சங்கரின் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் நீதிபதியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
கருத்து சுதந்திரம் பற்றி பேசும் முதல்வர் ஸ்டாலின், அவரது ஆட்சியின் அவலங்களை தோலுரித்து காட்டி வந்த சவுக்கு சங்கர் மீது வழக்கு போட்டு சித்திரவதை செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமாஎன பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.