‛‛இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது’’ என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்.பி., பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் என்ற கட்சி தலைவர் சையத் முஸ்தபா கமல் பேசியதாவது:
இன்று, உலக நாடுகள் நிலவிற்கு சென்று தரையிறங்கி சாதனை படைக்கும் நிலையில், கராச்சியில் நமது குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவல நிலை நிலவுகிறது. தொலைக்காட்சியில் நிலவில் தரையிறங்கி இந்தியா சாதனை படைத்தது என்ற செய்தி வந்தது. அடுத்த 2 நிமிடங்களில் கராச்சியில் திறந்த வெளி சாக்கடையில் விழுந்து குழந்தை இறந்தது என்ற செய்தியும் வந்தது.
பாகிஸ்தானின் வருவாய் இயந்திரமாக கராச்சி உள்ளது. பாகிஸ்தான் உருவானதில் இருந்து கராச்சியில் தான் இரண்டு துறைமுகங்கள் செயல்படுகின்றன. பாகிஸ்தான், மத்திய ஆசியா முதல் ஆப்கன் வரை நுழைவு வாயிலாகவும் இருக்கிறோம். ஆனால், 15 ஆண்டுகளாக தூய்மையான குடிநீரை கராச்சி நகருக்கு வழங்க முடியவில்லை. தண்ணீர் வந்தாலும், டேங்கர் மாபியா அதனை பதுக்கி வைத்து மக்களிடம் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். இவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.
கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் நிலவின் தென் பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்கி இந்தியா சாதனை படைத்தது. இதற்காக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்தது. இதன் மூலம், நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியா பெற்றது. ஆனால், பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து ஐஎம்எப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.