ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் காலமானதை கேள்விப்பட்டு ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி 64, வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்டோர் உயிரிழந்தனர். விபத்து நடந்து 17 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. ஹெலிகாப்டரில் பயணித்த அதிபர் உட்பட அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் நாட்டு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மூடுபனி காரணமாக இப்ராஹிம்ரைஸி சென்ற ஹெலிகாப்டர் வடமேற்கு ஈரான் பகுதியில் விபத்தில் சிக்கியது. கிழக்கு அசர்பைஜான் கவர்னர் மாலேக் ரஹ்மதி மற்றும் பல்வேறு அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். ஈரான்-அசர்பைஜான் எல்லையில் அணை திறப்பு விழாவில் பங்கேற்று திரும்பியபோது ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. ஹெலிகாப்டர் பைலட், உதவி பைலட், அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 9பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஈரான் அதிபர் மறைவிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் காலமானதை கேள்விப்பட்டு ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். சமீபத்தில் ஜனவரி 2024 இல் அவர்களுடன் நான் நடத்திய பல சந்திப்புகளை நினைவுகூர்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்கள். இந்த சோகத்தின் போது ஈரான் மக்களுடன் நாங்கள் நிற்கிறோம் என அவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.