இந்தியக் குடியுரிமை பெற்று மும்பையில் இன்று (மே 20) ஐந்தாம் கட்டத் தேர்தலில் தனது முதல் வாக்கை செலுத்தினார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.
55 வயதான அக்ஷய் குமார், கடந்த 30 ஆண்டுகளாக இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அண்மையில் அவரது நடிப்பில் ‘ஓ.எம்.ஜி 2’ படம் வெளியானது. இதில் சிவபெருமானின் தூதுவராக அக்ஷய் குமார் நடித்திருந்தார். கடந்த ஆண்டு 2023 ஆகஸ்ட் மாதம் அவர் இந்திய குடியுரிமை பெற்றுள்ளதாக எக்ஸ் வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, கனடா நாட்டு குடியுரிமையை அவர் பெற்றிருந்தார். அது சார்ந்து அவர் மீது ஒரு தரப்பினர் விமர்சனம் மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் இந்தியக் குடியுரிமையை அவர் பெற்றார்.
இன்று (மே 20) நாடாளுமன்றத் தேர்தல் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தனது முதல்வாக்கை செலுத்தினார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, தேசத்தின் வளர்ச்சிக்காக வாக்களித்துவிட்டேன். நீங்களும் வாக்களிக்க தவறாதீர்கள் என்றார். மேலும், முதல் வாக்கை செலுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனவும் குறிப்பிட்டார்.