ஐஐடி மெட்ராஸில், இளையராஜா பெயரில் இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்!

சென்னையில் உள்ள ஐஐடியில் இசை ஆராய்ச்சி மையத்துக்கு நேற்று (மே 20) அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சென்னை ஐஐடி சார்பில் இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாசாரத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் அமைப்பின் 9-ஆவது மாநாடு நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக இசை அமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு பேசியதாவது:

என் வாழ்க்கையில் இன்று முக்கியமான நாள். இசையை கற்று கொள்ள சென்னை வந்தேன். இதுநாள் வரை இசையை கற்று கொண்டேனா என்றால், கற்றுக் கொள்ளவில்லை. கல்வியாக இருந்தாலும் எந்த வேலையை செய்வதாக இருந்தாலும் அதில் ஒரு தாகம் இருக்க வேண்டும். அந்த தாகத்தோடு, லட்சியத்தோடு முயற்சி செய்தால் எந்தத் துறையாக இருந்தாலும் சாதிக்கலாம்.

எல்லோரும் சொல்கிறார்கள் நான் சாதனை செய்து விட்டேன் என்று. எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை. அன்று கிராமத்திலிருந்து எந்த மனநிலையில் புறப்பட்டு வந்தேனோ அதே மாதிரிதான் இன்றும் இருப்பதாக உணர்கிறேன். இசை எனக்கு மூச்சாகி விட்டது. இசை என்னிடம் இயல்பாகவே இருக்கிறது. சென்னை ஐஐடி மற்றும் இளையராஜா இசை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பள்ளி மூலம் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும் என்றார்.

திரிபுரா ஆளுநர் இந்திர சேனா ரெட்டி நல்லு பேசுகையில்; இளையராஜாவின் இசை நிறுவனத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது என்றார்.

ஐஐடி இயக்குநர் காமகோடி பேசுகையில்;

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான கலாசாரம், பாரம்பரியம், நடனம் இருக்கின்றன. தமிழ்நாட்டில் சிவ வாத்தியம் என்பது மிக முக்கியமானது. தமிழக பாரம்பரிய கலைகளில் பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் ஒயிலாட்டம் ஆகியவை இந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 1,500 இசை ஆராய்ச்சி மாணவர்கள், இசைக்கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top