பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் டாக்டர்கள் நஹீம், ஜாபர் இக்பால் வீடுகளில் இன்று (மே 21) என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில் மார்ச் 1ல் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்கள் மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில் பதுங்கி இருந்த, பயங்கரவாதிகள் முஸாவீர் ஹுசைன் ஷாகிப் 30; அப்துல் மதீன் அகமது தாஹா 30 ஆகியோரை கைது செய்தனர். இருவரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இந்த நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் இரு இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். பெரிய சுப்பண்ண கவுண்டர் தெருவைச் சேர்ந்த டாக்டர் நஹீம் மற்றும் சாய்பாபா காலனியில் உள்ள நாராயணகுரு சாலையைச் சேர்ந்த டாக்டர் ஜாபர் இக்பால் ஆகியோரின் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவத்தில் துப்பு கிடைக்குமா? என என்.ஐ.ஏ., அதிகாரிகள் களத்தில் இறங்கி உள்ளனர்.
இந்த சோதனையில் குண்டு வெடிப்பு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கிடைக்கப்பெறலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் சமீபகாலமாக பயங்கரவாதிகள் வந்து செல்வது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றுகூட (மே 20) குஜராத்தில் 4 ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பு இலங்கையில் இருந்து சென்னை வந்துள்ளனர். அதன் பின்னர் குஜராத் சென்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுபோன்று பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.தமிழக அரசு சட்டம், ஒழுங்கை சரியாக பராமரிக்கவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.