ஓட்டுனர் உரிமம் எடுக்கும் முறையை மத்திய அரசு எளிதாக்கியுள்ளதை தொடர்ந்து, இதற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் இனி மண்டல போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும் நிலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுனர் உரிமம் எடுக்கும் நடைமுறையை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. வரும் ஜூன் 1ம் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது. புதிய நடைமுறைக்காக, ஓட்டுனர் பயிற்சி அளிக்கும் மையங்களுக்கான விதிகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்படுவதாவது:
இனி ஓட்டுனர் உரிமம் பெற போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் திறன் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக, தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் இனி ஓட்டுநர் திறன் தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதற்காக, தனியார் ஓட்டுனர் பயிற்சி மையங்களுக்கு பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இலகு ரக வாகனங்களுக்கான பயிற்சி மையம் அமைக்க குறைந்தது 1 ஏக்கர் நிலம் தேவை. கனரக வாகனங்களுக்கான பயிற்சி மையம் அமைக்க 2 ஏக்கர் நிலம் தேவை. இந்த மையங்களில் தகுந்த தேர்வு நடத்துவதற்கான விதிகள் இருக்க வேண்டும்.
பயிற்சி அளிக்கும் பயிற்றுனர்கள் குறைந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், ஐந்து ஆண்டுகள் ஓட்டுனர் அனுபவம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், ‘பயோமெட்ரிக்’ மற்றும் தகவல் தொழில்நுட்ப அடிப்படைகளை அறிந்திருத்தல் அவசியம்.
இலகு ரக வாகனங்களுக்கான பயிற்சி, குறைந்தது நான்கு வாரங்கள் அல்லது 29 மணி நேரம் இருக்க வேண்டும்.
அதேபோல், கனரக வாகனங்களுக்கான பயிற்சி ஆறு வாரங்கள் அல்லது 38 மணி நேரமாக இருக்க வேண்டும். தனியார் பயிற்சி மையங்கள் அரசு அதிகாரிகளால் அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்படும். இந்த விதி மாற்றத்தின் வாயிலாக, இலகு மற்றும் கனரக வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர்களின் தரத்தை உயர்த்துவதே அரசின் நோக்கமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.