தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட, பாம்பின் மேல் நடனமாடும் குழந்தை கிருஷ்ணர் உலோகச் சிலை மீட்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட பழங்காலச் சிலைகள் மற்றும் கலைப் பொருட்கள், வெளிநாட்டு அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களில் வைக்கப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்யும்படி, மாநில சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., சைலேஷ் குமார் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2008ல், அமெரிக்காவை சேர்ந்த லூயிஸ் நிக்கல்சன், ‘கோல்ட் ஆப் காட்ஸ்’ என்ற கட்டுரையை இணையதளத்தில் பரப்பினார். அதில் தமிழக கோவில்களுக்கு சொந்தமான சிலை ஒன்றின் படம் இடம் பெற்று இருந்தது.
அந்தச் சிலை தமிழகத்தில் கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணர் என அழைக்கப்படுவதும், குழந்தை கிருஷ்ணர் பாம்பின் மேல் நடனமாடுவது போன்றும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
அதேபோல, தாய்லாந்தை சேர்ந்த நபர் ஒருவரும் இணையத்தில் கட்டுரை ஒன்றை பதிவு செய்து இருந்தார். அதிலும் குழந்தை கிருஷ்ணர் சிலை இருந்தது.
இரண்டு கட்டுரையிலும் இடம் பெற்று இருந்த உலோக சிலை, தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டது தான் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். மேலும் அந்த சிலை குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது, கட்டுரை வெளியிட்ட தாய்லாந்து நாட்டை சேர்ந்த நபர், கம்போடியா, இந்தியா, தென் கிழக்கு ஆசியா மற்றும் இதர நாடுகளில் இருந்து பழமையான கலைப்பொருட்கள், சிலைகளை சேகரிக்கும் பழக்கம் உள்ளவர்.அவர் சர்வதேச அளவில், சட்ட விரோதமாக சிலைகளை வாங்கி விற்பனை செய்பவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், அந்தச் சிலையை டக்ளஸ் லாட்ச் போர்டு என்பவர், பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூரிடம் இருந்து 2005ம் ஆண்டு 5.20 கோடி ரூபாய்க்கு வாங்கியதையும் போலீசார் உறுதி செய்தனர்.
சுபாஷ் சந்திர கபூருக்கு, நான்சி வைனர் என்ற சிலை மதிப்பீட்டாளர், குழந்தை கிருஷ்ணர் சிலைக்கு போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்து இருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.
அந்தச் சிலை பிற்கால சோழர் காலமான 11 – 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சிலையை சுபாஷ் சந்திர கபூர் மற்றும் அவரது கூட்டாளிகள், தாய்லாந்து வழியாக அமெரிக்காவுக்கு கடத்தி உள்ளனர் என்பதற்கான ஆதாரங்களையும் திரட்டினர்.
அவற்றை, இந்திய தொல்லியல் துறை வாயிலாக அமெரிக்காவுக்கு அனுப்பி உள்ளனர். இதையடுத்து அந்நாட்டு அரசு சிலையை தாய்லாந்து நாட்டிடம் ஒப்படைத்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்ட அந்த சிலையை தாய்லாந்து அரசு நம் நாட்டு தூதரக அதிகாரிகளிடம் கொடுத்துள்ளது. விரைவில் அந்த சிலை, தமிழகம் எடுத்து வரப்பட உள்ளதாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.