பாலஸ்தீனத்தை தனிநாடாக இந்தியா கடந்த 1980-களிலேயே அங்கீகரித்து விட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும், காஸாவில் உள்ள பயங்கரவாதிகளுக்கும் கடந்த சில மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் அப்பாவிகள் கொல்லப்படுவது குறித்து ஐநா மற்றும் உலக நாடுகள் கவலை தெரிவித்தது.
இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனிநாடாக ஸ்பெயின், அயர்லாந்து குடியரசு, நார்வே ஆகியவை அங்கீகரித்துள்ளன. தனிநாடாக பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று ஸ்பானியப் பிரதமர் பெட்ரோ சஞ்செஸ் தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பாலஸ்தீனம் குறித்து பேசியதாவது;
நார்வே, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இப்போதுதான் பாலஸ்தீனத்தை தனிநாடாக அறிவிக்கின்றன. ஆனால், பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா 1980-களிலேயே அங்கீகரித்துவிட்டது. இந்தியாவின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.