விலங்குக் கொழுப்பை பிரசாதத்தில் சேர்த்தது மன்னிக்க முடியாத குற்றம். இது இந்து மத நம்பிக்கையை கேலிக்கூத்தாக்குவதற்கு சமம் என அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திரா தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திரா தாஸ் கூறியதாவது:
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வின்போது, திருப்பதியில் இருந்து வரவழைக்கப்பட்ட 300 கிலோ லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. திருப்பதி லட்டுவில் விலங்குக் கொழுப்பு சேர்க்கப்பட்டது கண்டனத்துக்குரியது. மேலும் அது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைணவர்கள், உணவில் பூண்டு, வெங்காயம் கூட பயன்படுத்துவதில்லை. அப்படியிருக்க விலங்குக் கொழுப்பை பிரசாதத்தில் சேர்த்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது இந்து மத நம்பிக்கையை கேலிக்கூத்தாக்குவதற்கு சமம்.
இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை செய்ய உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.