இந்தியா பேசினால் உலகம் கவனிக்கும் : அமெரிக்காவில் பிரதமர் மோடி பேச்சு

இந்தியா பேசினால் உலகம் கவனிக்கும். தெற்கின் வலுவான குரலாக நாம் உள்ளோம். உலகில் பேரிடர் நிகழ்ந்தால் இந்தியா தான் முதலில் உதவுகிறது என அமெரிக்கா வாழ் இந்திய மக்களிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மூன்று நாள் அரசு முறை பயணமாக கடந்த சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அங்கம் வகிக்கும் குவாட் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக நேற்று முன்தினம் (செப்டம்பர் 21) அமெரிக்கா சென்ற அவருக்கு அங்குள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அமெரிக்க அதிபரின் இல்லத்தில் அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.

அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நியூயார்க் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார். ‘மோடியும் அமெரிக்காவும்’ என இந்த சந்திப்பு அறியப்பட்டது. இதில் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் உரையை கேட்ட பல ஆயிரக்கணக்கான மக்கள், ‘மோடி மோடி’ என்ற முழக்கங்களை தொடர்ந்து எழுப்பினர்.
இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

“இந்திய சமூகத்தின் வசம் உள்ள திறன்கள் குறித்த புரிதல் எனக்கு ஆழமாக உள்ளது. நான் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதே அதை அறிந்துள்ளேன். நீங்கள் இந்தியாவின் வலுவான தூதுவர்கள். இந்தியர்கள் ஆகிய நாம் பல்வேறு மொழிகள், மத ரீதியிலான நம்பிக்கைகள் கொண்டிருந்தாலும் ஒற்றுமையாக முன்னேறி வருகிறோம்.

இந்திய தேசம் வாய்ப்புக்காக காத்திருக்கும் காலம் கடந்து, வாய்ப்புகளை வழங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் இந்தியா இதனை செய்துள்ளது சான்று. உலகில் இந்தியா அழுத்தத்தை அதிகரிக்க விரும்பவில்லை. மாறாக அதன் தாக்கத்தை அதிகரிக்க விரும்புகிறது. நாம் ஆதிக்கம் செலுத்த விரும்பவில்லை. உலக வளர்ச்சிக்காக ஒத்துழைப்பை அதிகரிக்க விரும்புகிறோம்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான கூட்டணி வலுவடைந்து வருகிறது. PUSHP (பூ) உங்களுக்கு நினைவிருக்கும். இதனை நான் இப்படி சொல்ல விரும்புகிறேன். P – Progressive Bharat – முன்னேறும் பாரதம், U – Unstoppable Bharat – தடுக்க முடியாத பாரதம், S- Spiritual Bharat – ஆன்மிக பாரதம், H – Humanity First – மனிதநேய முதன்மை, P – Prosperus India – வளம் மிக்க பாரதம் என இந்த ஐந்தும் வளமான பாரதத்தை உருவாக்கும்.

இந்தியா பேசினால் உலகம் கவனிக்கும். தெற்கின் வலுவான குரலாக நாம் உள்ளோம். உலகில் பேரிடர் நிகழ்ந்தால் இந்தியா தான் முதலில் உதவுகிறது. கரோனா சமயத்தில் சுமார் 150 நாடுகளுக்கு நாம் தடுப்பூசி மற்றும் மருந்துகளை விநியோகித்தோம்.

அறிவு பகிர்வதற்கும், செல்வம் அக்கறைக்கும், அதிகாரம் பாதுகாப்பதற்கும் என இந்தியா கருதுகிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியாவில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

இதைத் தொடர்ந்து டெலவரில் அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். பின்னர் பிரதமர் மோடி அங்கு நடந்த குவாட் கூட்டமைப்பில் பங்கேற்று உரையாற்றினார். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த கூட்டமைப்பில் பல்வேறு தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் நியூயார்க் நகரில் இந்திய மக்களை சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், ‘நியூயார்க்கில் நேபாள நாட்டின் பிரதமர் கே.பி.ஒலியுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்தியா-நேபாள நட்புறவு மிகவும் வலுவானது; இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, மேலும் புதிய உத்வேகத்தை அடையும் என்று நம்புகிறோம். குறிப்பாக எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது குறித்து பேசினோம்’ என்றார். அதேபோல் மற்றொரு பதிவில், ‘குவைத் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா காலித் அல்-ஹமத் அல்-சபா உடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மருந்து, உணவு பதப்படுத்துதல், தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் பல துறைகளில் இந்தியா – குவைத் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா நிறுவனங்களின் சிஇஓ-க்கள் உடன் சந்திப்பு:

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின்னர், இந்தியா – அமெரிக்கா இடையிலான தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவன சிஇஓ-க்கள் பங்கேற்ற வட்டமேசை கூட்ட நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அடாப் சிஇஓ சாந்தனு நாராயண், ஐபிஎம் சிஇஓ அர்விந்த் கிருஷ்ணா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட சிஇஓக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top