கனடாவில் உள்ள டொரான்டோ மாகாணத்தில் பிராம்ப்டன் நகரத்தில் (நவம்பர் 03) அன்று கோயில் உள்ளே நுழைந்து இந்துக்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அங்கு பல ஆயிரக்கணக்கான இந்துக்கள் திரண்டு ஜெய் ஸ்ரீராம் முழக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கனடாவில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் அண்மைக்காலமாக இரு நாடுகளின் உறவு மோசமடைந்து வருகிறது.
கனடா அரசு ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற பயங்கரவாதி கொலை வழக்கில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பெயர் வரை இழுத்து விட்டு நாளுக்கு நாள் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பயங்கரவாதிகளின் இந்த சதி திட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. கனடாவின் பிராம்டனில் இந்து சபா மந்திர் என்ற பெயரில் மிகப்பெரிய கோயில் ஒன்று உள்ளது.
அந்த கோயிலின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பயங்கரவாதிகள் கோவிலுக்கு வந்த பக்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தாக்குதலிலும் ஈடுபட்டனர். மேலும் கைகளில் கிடைத்தவற்றை கொண்டு கோயிலின் மீதும், சுவாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் மீதும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், சட்டத்தின் படி அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இத்தகைய தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் வன்முறை நடைபெற்ற கோயில் வளாகத்தில் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
கனடாவில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான இந்துக்கள் வசித்து வரும் நிலையில், இதுநாள் வரையில் இதுபோன்ற போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.