அமெரிக்க அதிபர் தேர்தலில், பல்வேறு யூகங்களையும், கணிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். அதிபராக இருந்தவர் அடுத்த தேர்தலில் தோல்வியை சந்தித்து மூன்றாம் முறை மீண்டும் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.இந்திய பிரதமர் நரேந்திர மோடி எனது மிகச் சிறந்த நண்பர் என, தனது வாக்கு சேகரிப்பின் போது டொனால்ட் ட்ரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று (நவம்பர் 05) நடைபெற்றது. அந்த நாட்டின் 50 மாகாணங்களிலும் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் அப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டனர். இதில் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபரானார்.
தற்போதைய அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டனர். ஆரம்பம் முதலே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த சூழலில் அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமார் 95 சதவீத இடங்களில் வாக்குச்சீட்டு நடைமுறையிலும், மீதமுள்ள 5 சதவீத இடங்களில் மின்னணு முறையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி உள்ளது. இதன்படி வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே 8.2 கோடி பேர் வாக்களித்துவிட்டனர். அதாவது 40 சதவீதம் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர். மீதமுள்ள வாக்காளர்கள் நேற்று தங்கள் வாக்கை செலுத்தினர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக்காளர் குழு) நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த நாட்டில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள்.
சிறிய மாகாணங்களில் 1 முதல் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 55 வரை வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும்.
ஒரு மாகாணத்தில் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றால், அந்த மாகாணத்தின் ‘எலக்டோரல் காலேஜ்’ வாக்குகள் முழுவதும் வெற்றி வேட்பாளரை சென்றடையும். தற்போதைய அதிபர் தேர்தலில் நேற்றிரவு 7 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணி) வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து மாகாண வாரியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகளவில் பல்வேறு நாடுகளில் தேர்தல் நடந்தாலும் அமெரிக்க அதிபர் தேர்தல் எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. இம்முறை நடைபெற்ற அதிபர் தேர்தல் கடந்தகால தேர்தல்களின் போது நிகழ்ந்த பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் தான் இருந்தது.
நடப்பு தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளர், முன்னாள் அதிபர் டிரம்ப், ஜனநாயகக்கட்சி வேட்பாளர், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையேதான் போட்டி. வாக்குப்பதிவு முடிந்து முடிவுகள் கொஞ்சம், கொஞ்சமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்நாட்டில் உள்ள 50 மாகாணங்களில் உள்ள 538 பிரதிநிதிகளில் 270 பேர் ஆதரவு பெறும் வேட்பாளர் தேர்தலில் அதிபராக வெற்றி பெற முடியும். தொடக்கம் முதலே டிரம்ப் அபரிமிதமான முன்னிலையில் இருந்தார்.
கடிகார முள்ளின் வேகம் நகர, நகர முன்னிலை நிலவரத்தில் வித்தியாசம் இருந்ததே தவிர வேறு முக்கிய மாற்றங்கள் காணப்படவில்லை. தேர்தல் முடிவு வெளியான நிமிடத்தில் இருந்தே டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.
தேர்தலுக்கு முன்னரே டிரம்ப், கமலா ஹாரிஸ் இடையே உள்ள போட்டி குறித்து கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதில் கமலா ஹாரிசுக்கு 48 சதவீதம் மக்கள் ஆதரவாக இருக்கின்றனர் என்றும், டிரம்புக்கு மக்கள் ஆதரவு 44 சதவீதம் உள்ளது என்றும் கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க நிலைமை மாறியது.
தனக்கு எதிரான பல்வேறு எதிர்மறை விவகாரங்களையும் பின்னுக்குத் தள்ளி டிரம்ப் முன்னிலைக்கு வந்து விட்டதாக கணிப்புகள் வெளியாகின. தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக கூட பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ், ‘டிரம்ப் அதிபர் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர்’ என்று செய்தி வெளியிட்டது.
இன்னொரு பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட், கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு தெரிவிக்க இருந்ததாகவும் அதை அந்த பத்திரிகையின் உரிமையாளர் நிறுத்தி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இப்படி பல்வேறு எதிர்மறை தகவல்கள் வெளியான நிலையிலும், வாக்காளர்கள் மனதில் இடம் பிடித்து டிரம்ப் கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். தற்போது எண்ணப்பட்டது வரை, மொத்தம் 50 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகளை அவர், கமலா ஹாரிஸை காட்டிலும் கூடுதலாக பெற்றுள்ளார்.
தற்போது வரை டிரம்ப் 277 எலக்ட்ரோல் காலேஜ் வாக்குகளையும், கமலா ஹாரிஸ் 226 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இன்னும் டிரம்ப் வெற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் கமலா ஹாரீஸ் கனவு, பகற்கனவாகி விட்டது உறுதி செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில், வெற்றி குறித்து புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப் ஆற்றிய உரையில்; ‘கடவுள் இந்த ஒரு காரணத்துக்காகத் தான், கொலை முயற்சி சம்பவங்களில் இருந்து என்னைக் காப்பாற்றியுள்ளார்,’ என தெரிவித்தார்.
குடியரசுக் கட்சி வெற்றிக்காக, வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கருக்கும் எனது நன்றி. இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப் போகிறது. இதுவரை யாரும் காணாத வகையில், ஒரு இயக்கத்தை நடத்தி வெற்றி வாகை சூடியுள்ளோம்.
அமெரிக்கா மக்களுக்காக கடுமையாக உழைப்பேன். பிரச்னைகளை தீர்ப்பேன். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும். மக்கள் என்னை நம்பி வாக்களித்துள்ளனர். அவர்கள் நம்பிக்கை வீண் போகாது. அமெரிக்கா மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் வகையில் ஆட்சி நடத்துவேன். எண்ணில் அடங்காத தடைகளை கடந்து வெற்றி பெற்றுள்ளேன். அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றுவேன்.
வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மனைவிக்கு நன்றி. இக்கட்டான சூழலில் எனக்கு துணையாக இருந்த குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. நாட்டை சீரமைத்து மீண்டும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம். அதிபர் தேர்தல் மட்டுமல்ல செனட் மக்கள் சபையிலும் நமக்கே முன்னிலை கிடைத்துள்ளது. தேர்தல் வெற்றிக்கு முக்கியமான நபர் எலான் மஸ்க்; எனக்கு ஆதரவளித்த எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்குக்கு நன்றி.
900க்கும் மேற்பட்ட பிரசாரங்கள் மேற்கொண்டு, அந்த பிரசாரங்களின் பலனாக வெற்றி சாத்தியமாகி உள்ளது. ஒளிமயமான எதிர்காலத்தை அமெரிக்க மக்களுக்கு உறுதி செய்யப் போகிறோம். உலகிலே மிக முக்கியமான பொறுப்பு அமெரிக்க அதிபர் பொறுப்பு. அமெரிக்க மக்களுக்கு பெருமை சேர்ப்பேன். மக்களின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்.
துணை அதிபராக தேர்வாகும் ஜே.டி.வான்ஸ்க்கு வாழ்த்துகள். கடும் உழைப்பாளிகளான அமெரிக்கர்களுக்கு நன்றி, உங்கள் அன்பிற்கு காணிக்கையாக எங்கள் உழைப்பை தருவோம். அமெரிக்காவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் சட்டப்பூர்வமாக வர வேண்டும். சீனா உள்ளிட்ட பிற நாடுகளிடம் நம்மிடம் உள்ள அளவிற்கு எண்ணெய் வளங்களோ, பிற வளங்களோ இல்லை. கடவுள் ஏதோ ஒரு காரணத்திற்காக என் உயிரைக் காப்பாற்றினார் என்று பலர் என்னிடம் கூறினர். நம் நாட்டைக் காப்பாற்றவும், அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றவும் தான் கடவுள் என்னைக் காப்பாற்றினார். நாம் அந்த கடமையை நிறைவேற்றியே தீருவோம். இவ்வாறு டிரம்ப் பேசினார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷாவின் கணவரான ஜே.டி.வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராகிறார். உஷாவின் தந்தை ஆந்திராவைச் சேர்ந்தவர், சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்தவர். துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறுகையில், ‘அமெரிக்கர்கள் கனவுகள் ஒவ்வொன்றும் மெய்ப்படும்’ என்றார்.