சென்னையில் அரசு மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று (நவம்பர் 14) ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் தலைவர் மருத்துவர் செந்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, நவம்பர் 14-ம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களின் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. அவசர சிகிச்சையை தவிர்த்து அனைத்து விதமான மருத்துவ சேவைகளையும் நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதையடுத்து புறநோயாளிகள் பிரிவு, அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள், பிற சிகிச்சைகள், மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகியவை தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிறுத்தப்படும்.
மருத்துவர் மீதான கடுமையான தாக்குதலை கண்டிக்கவும், குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்கவும், வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெறும் எனக்கூறப்பட்டுள்ளது.