மருத்துவர்கள் போராட்டம் எதிரொலி: சிகிச்சை கிடைக்காமல் இளைஞர் பலி: கிண்டி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

சென்னை, கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் 31 வயதான விக்னேஷ் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு நிறுத்தப்படவுள்ளதாகவும், அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படும் என்று மருத்துவர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில், சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (31) என்ற இளைஞர், கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிப்பட்டிருந்தார். ஆனால் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்காமல் பொதுப்பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பொதுப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷின் உடல்நிலை மோசமான பின்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று (நவம்பர் 15) காலை உயிரிழந்தார்.

இந்தநிலையில், மருத்துவர்கள் இல்லாததால் தான் இளைஞர் விக்னேஷ் உயிரிழந்து விட்டதாக கூறி அவருடைய உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். மேலும், மருத்துவர்கள் போராட்டத்திற்குச் சென்றதால் சிகிச்சை அளிக்க வரவில்லை என்றும், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் வரவில்லை என்று குற்றச்சாட்டை வைத்து மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர். இதனால் கிண்டி அரசு மருத்துவமனையில் மீண்டும் பரபரப்பான சூழல் நிலவியது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இல்லாமல் இருப்பதும் மற்றும் சரியான மருந்துகள் வழங்கப்படாமல் இருப்பதும், மக்களை அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கே அச்சப்படும் நிலைக்கு தள்ளியுள்ளது. இனியாவது அரசு மருத்துவமனை மீது உரிய கவனம் செலுத்துமா இந்த விடியா மாடல் அரசு ?.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top