பழங்குடியின மக்களின் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
பிர்சா முண்டாவின் பிறந்த தினம் பழங்குடியினரின் பெருமித தினமாக மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின தலைவரான பிர்சா முண்டா, ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள பன்சேரா உத்யான் பகுதியில், அவரது சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட சமூக ஊடக பதிவில், “பழங்குடியினரின் சுயமரியாதையின் அடையாளமான பிர்சா முண்டாவின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ‘பழங்குடியினரின் பெருமை தினத்தில்’ நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பழங்குடியினரின் அடையாளத்தைப் பாதுகாக்க அந்நிய ஆட்சிக்கு எதிராக பழங்குடி சமூகத்தை ஒன்றிணைத்து, உல்குலன் இயக்கத்தை வழிநடத்தியவர் பிர்சா முண்டா. பழங்குடி சமூக கலாச்சாரத்தின் மீதான சுயமரியாதை உணர்வை எழுப்புவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கை வகித்துள்ளார். கலாச்சாரம் மற்றும் தாய்நாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பு நாட்டு மக்களுக்கு என்றென்றும் ஊக்கமளிக்கும்’’ என குறிப்பிட்டுள்ளார்.