நாடு முழுவதும் (நவம்பர் 26) இந்திய அரசியல் சாசன தினம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு இந்திய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட 75வது ஆண்டு ஆகும். எனவே, இந்த நாளை கூடுதல் சிறப்புடன் மத்திய அரசு கொண்டாடுகிறது.
இதனை முன்னிட்டு, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிறப்பு தபால் தலை மற்றும் சிறப்பு நாணயத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்டார். அதன் பிறகு, அரசியல் சாசனத்தின் முன்னுரை வாசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், இந்த விழா நிறைவின் போது ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு, துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை சபாநாயகர், மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் வாழ்த்து சொல்லாமல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, ஜனாதிபதியை அவமரியாதை செய்துவிட்டு மேடையை விட்டு புறப்பட்டார். இவரது செயலை பாஜக வன்மையாக கண்டித்துள்ளது.
இது தொடர்பாக, பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா, இரண்டு வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த முதல் வீடியோவில், விழாவில் தேசியக் கீதம் இசைக்கப்படும்போது ராகுல் காந்தி கீழ்நோக்கி அங்கும் இங்கும் கண்ணை அசைத்துக் கொண்டிருப்பதை காண்பித்திருந்தது. மற்றொரு வீடியோவில்; தேசிய கீதம் முடிந்த பின்னர் அனைத்து தலைவர்களும் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த போது, ராகுல் காந்தி மட்டும் வாழ்த்து தெரிவிக்காமல் மேடையை விட்டு கீழே இறங்குவதை காண்பித்தது.
“ராகுல் காந்தியால் 50 வினாடிகள் கூட தனது கவனத்தை ஒரிடத்தில் வைத்திருக்க முடியாது. காங்கிரஸ் எப்பொழுதும் ஜனாதிபதி திரௌபதி முர்முவை அவமதிக்கிறது. ஏனென்றால் இந்தியாவில் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடியின பெண் அவர். ராகுல் காந்தி மற்றும் குடும்பத்தினர் பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை வெறுக்கிறார்கள். அதனை ராகுலின் செய்கை காட்டுகிறது” என்று அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.