ஜெயித்தால் ஓகே; தோற்றால் மட்டும் ஈவிஎம் காரணமா? வாக்குச்சீட்டு முறை கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் குட்டு

தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் கே.ஏ.பால். கடந்த 2008ம் ஆண்டில் இவர் பிரஜா சாந்தி என்ற பெயரில் கட்சி தொடங்கினார். இவர், சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மின்னணு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் வழங்கும் வேட்பாளர்கள் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். தேர்தல் வன்முறைகளை தடுக்க வேண்டும். கட்சிகள் நன்கொடை பெறும் நடைமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் விக்ரம்நாத், பி.பி.வரலே அமர்வு முன்பு (நவம்பர் 26) விசாரணைக்கு வந்தது. அப்போது கே.ஏ.பால் நேரில் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது: வாக்குச்சீட்டு நடைமுறை கோரிக்கைக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் சுமார் 180 பேர் ஆதரவு அளிக்கின்றனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று அமெரிக்க தொழிலதிபரும் தொழில்நுட்ப நிபுணருமான எலன் மஸ்க் கூறியிருக்கிறார். இதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

அவரது வாதத்தை தொடர்ந்து நீதிபதிகள் விக்ரம் நாத், பி.பி.வரலே கூறியதாவது: தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எந்த புகாரும் கூறுவது கிடையாது. அதேநேரம் தேர்தலில் தோல்வியை தழுவும் கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யப்பட்டிருப்பதாக புகார் கூறுகின்றன. ஆந்திராவை பொறுத்தவரை சந்திரபாபு நாயுடு தேர்தலில் தோல்வி அடைந்தபோது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது புகார் கூறினார். அண்மையில் நடந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்திருக்கிறார். தற்போது அவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து புகார் கூறுகிறார்.

நீங்கள் (கே.ஏ.பால்) சமூக சேவையில் ஈடுபட்டிருப்பதாக கூறுகிறீர்கள். நீங்கள் ஏன் அரசியல் களத்துக்குள் நுழைய வேண்டும். உங்களது மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகள் தேர்தலில் தோல்வியுற்றதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறை வேண்டும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிவந்தனர். தற்போது அவர்கள் அனைவருக்கும் உச்ச நீதிமன்றம் சரியான குட்டு வைத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top