தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் அலகட்டு எனும் மலை கிராமத்தில் 13 வயது சிறுமியை பாம்பு கடித்ததால், சாலை வசதியில்லாத காரணத்தினால் தூளி கட்டி தூக்கி சென்றபோது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் அலகட்டு எனும் மலை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 45க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக சாலை வசதி வேண்டி ஆளும் திமுக அரசு மற்றும் இதற்கு முந்தைய அதிமுக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் ஒருவர் கூட மலை கிராம மக்களின் கோரிக்கை இன்று வரையில் நிறைவேற்றவில்லை.
அதே போன்று சமீபத்தில்கூட மாவட்ட ஆட்சியருக்கு ‘உங்கள் ஊரில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் சாலை வசதி கேட்டு அலகட்டு மலை கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். ஆனால் அந்த கோரிக்கை மனுவுக்கு எந்தவித பதிலும் கிடைக்காததால், அப்பகுதி பொதுமக்களே தாமாக முன்வந்து சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்போதும் திமுக அரசின் கீழ் உள்ள வனத்துறையினர் இதில், ‘பாதை போடக் கூடாது’ என தடுத்துள்ளனர். இதனால் அத்திட்டத்தை மக்கள் பாதியிலேயே கைவிட்டனர்.
இந்த நிலையில், அலகட்டு மலைக்கிராமத்தில் ருத்ரப்பா- சிவலிங்கி எனும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் 13 வயதுடைய இளைய மகள் இன்று காலை (நவம்பர் 28) தங்களது வீட்டு அருகே கீரை பறித்தபோது, அவரை பாம்பு கடித்துள்ளது. இதனால் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் சாலை வசதி இல்லாததால் அந்த மலை கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லமுடியவில்லை. இதனால் அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் தூளி கட்டி காட்டுப்பாதை வழியாக மலை அடிவாரமான சீங்காடு என்ற இடத்திற்கு சிறுமியை சுமந்துக்கொண்டு வந்தனர். சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிற்கும் மேல் வனப்பகுதியை கடந்து வந்த நிலையில், சீங்காடு பகுதியை அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அங்கு தயார் நிலையில் இருந்த ஆட்டோவில் ஏற்ற முயன்றபோது, சிறுமியின் உயிர் பிரிந்தது. சிறுமி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மலை கிராமங்களுக்கு குடிநீர், சாலை, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை திட்டங்களை செயல்படுத்துவதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்குகிறது. ஆனால் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மலை கிராம மக்களுக்கான நிதியை என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. சாலை வசதி இருந்திருந்தால் 13 வயது சிறுமி இன்று பாம்பு கடிக்கு உயிரிழந்திருக்க மாட்டார் என்பது நிதர்சனமான உண்மை. சிறுமி உயிரிழப்புக்கு ஆளும் திமுக அரசே காரணம் என மலைவாழ் மக்கள் குற்றச்சாட்டாக உள்ளது.