‘‘தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்கச் செய்வோம்’’ ஃபிஜி நாட்டில் தமிழ் கற்பிக்கும் திட்டம்: தொடங்கி வைத்தது மோடி அரசு

“தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்பது மகாகவி பாரதியாரின் ஆசை. இதனை “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்ற பாட்டில் பாரதியார் பாடியுள்ளார். இதனை சிறப்பாக நிறைவேற்றி வருவது மோடியின் அரசு
ஃபிஜி நாட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் திட்டம் மத்திய அரசு நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் அந்நாட்டுக்கான இந்திய தூதரும் தமிழருமான பி.எஸ். கார்த்திகேயன் கலந்து கொண்டு புதிய திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் ராக்கிராக்கி என்ற பகுதியில் உள்ள ‘சங்கம்’ என்ற இந்திய வம்சாவளியினர் நடத்தி வரும் அமைப்பு நிர்வகிக்கும் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஃபிஜி கல்வித் துறையுடன் சங்கம் என்று அழைக்கப்படும் தென்னிந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம் என்ற தமிழர் வம்சாவளியினருக்கான அமைப்பு சேர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.

இதன்படி இந்தியாவிலிருந்து இரு தமிழ் ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் ராக்கிராக்கியில் உள்ள ஒரு பள்ளியிலும், லபாசா என்ற பகுதியில் உள்ள சங்கம் அமைப்பின் தொடக்கப் பள்ளியிலும் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படும். இதற்கான நிதியுதவியை இந்திய அரசு வழங்குகிறது.

இந்தத் திட்டத்தின் துவக்க விழாவில் இந்திய தூதர் பி.எஸ். கார்த்திகேயன் பேசுகையில், ‘‘கலாசாரத்தைப் பாதுகாப்பதிலும் வடிவமைப்பதிலும், பல்வேறு சமூகங்களுக்கிடையில் அதிக புரிதலை வளர்ப்பதிலும் ஒரு மொழியின் பங்கு இன்றியமையாதது. எட்டு கோடிக்கும் அதிகமானோரால் பேசப்படும் துடிப்புமிக்க உலகளாவிய மொழியான தமிழின் வளமான கலாசார மற்றும் மொழியியல் பாரம்பரியத்தை உணர்வது முக்கியம். தமிழ் மொழியைக் கற்கும் வாய்ப்பை தமிழர்களும் மொழி ஆர்வலர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் சங்கம் அமைப்பின் பொதுச் செயலர் ஞானேஸ்வர் ராவ், கல்வித் துறைக்கான நிரந்தர பிரதிநிதி வுனிசியா, ஆர்.சி. மனுபாய், குழும தலைமை செயல் அதிகாரி உப்பிலியப்பன் கோபாலன், சங்கம் தலைமை செயல் அதிகாரி ஜெய் நாராயணன் மற்றும் இந்திய வம்சாவளியினர் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top