கர்நாடக மாநிலம், பெங்களூரு மத்திய சிறையில் இருந்த போது பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பயங்கரவாதி சல்மான் ரெஹ்மான் கான், ருவான்டா நாட்டில் பதுங்கி இருந்தார். லஷ்கர் -இ -தொய்பா அமைப்பைச் சேர்ந்த இந்த பயங்கரவாதியை இப்போது இன்டர்போல் உதவியுடன் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது.
நமது பாரத நாட்டில் பயங்கரவாத செயல்களைத் தடுப்பதில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. பல்வேறு பயங்கரவாத செயல்களை என்ஐஏ அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
இதற்கிடையே சமீபத்தில், பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டுவிட்டு ருவான்டா நாட்டிற்குத் தப்பியோடிய பயங்கரவாதியை என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வருகிறார்கள். ருவாண்டாவில் இருந்து அந்த பயங்கரவாதி என்ஐஏ அதிகாரிகளால் நேற்று (நவம்பர் 28) நாடு கடத்தப்பட்டார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு சிறைகளில் இருந்த சல்மான், பயங்கரவாதிகளுக்கு வெடிமருந்து விநியோகம் செய்ததில் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் ருவான்டா நாட்டிற்குத் தப்பியோடிய நிலையில், அவரை தான் இப்போது என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் இந்தியா அழைத்து வருகிறார்கள்.
அதாவது கடந்த 2018ம் ஆண்டு சல்மான் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் எந்தவொரு பயங்கரவாத அமைப்பிலும் இல்லை. 2022ம் ஆண்டு வரை அவர் சிறையில் இருந்த நிலையில், அங்கு தான் டி நசீர் என்ற பயங்கரவாதியுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை கைதியான நசீர் மூளைச்சலவை செய்து சல்மானை பயங்கரவாதியாக மாற்றியிருக்கிறார். பிறகு சல்மான் சிறைக்குள்ளேயே பயங்கரவாத நெட்வோர்க்கை உருவாக்கியுள்ளார்.
அதன் பிறகு வெளியே வந்த சல்மான் தொடர்ந்து பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. ஆயுதங்கள், வெடிமருந்துகளைப் பயங்கரவாதிகள் வாங்கவும், வினியோகிக்கவும் அவர் உதவியிருக்கிறார். அதேபோல பயங்கரவாதி நசீர் ஒரு முறை நீதிமன்றத்திற்கு ஆஜராக போனபோது அவர் தப்பிச் செல்ல முயன்றார். அதற்கும் சல்மான் தான் உதவியுள்ளார். இதெல்லாம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்த நிலையில், சல்மான் இந்தியாவில் இருந்து தப்பியோடினார். அவர் எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது.
இதற்கிடையே சிறைச்சாலை பயங்கரவாத சதி வழக்கை முதலில் பெங்களூரு போலீசார் தான் விசாரித்து வந்தனர். அதன் பின்னரே இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய பயங்கரவாதி சல்மான் மீது உபா, வெடிபொருள் சட்டம் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
என்ஐஏ வேண்டுகோளைத் தொடர்ந்து இன்டர்போல் சார்பில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி ரெட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது. இந்த ரெட் நோட்டீஸின்படி நடவடிக்கை எடுத்த ருவாண்டா அதிகாரிகள், சல்மானைக் கைது செய்து, இந்திய ஏஜென்சிகளுக்கு தகவல் தெரிவித்தனர். என்ஐஏ அமைப்பின் தொடர் முயற்சியால் பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஒரு ஆண்டில் மட்டும், இன்டர்போல் அதிகாரிகளுடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளால் தப்பியோடிய 26 பயங்கரவாதிகள் மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நமது பாரத தேசத்தில் குற்றம் செய்துவிட்டு உலகில் எந்த நாட்டில் பதுங்கியிருந்தாலும் அவர்களை பிரதமர் மோடி அரசு சும்மா விடாது என்பது குறிப்பிடத்தக்கது.