பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 35 அமைச்சர்கள் 12 அமைச்சர்கள் 37 பிராந்திய தலைவர்கள் 350 கட்சி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டின் சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகமும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அகில இந்திய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
டெல்லியில் உள்ள மாநகராட்சி கவுன்சில் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி குத்துவிளக்கேற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
முதல் நாளான நேற்று இந்த ஆண்டு நடைபெறக்கூடிய 9 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவை குறித்தும் மாநிலங்களில் கட்சியின் வேலை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நிலை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அனைத்து மாநிலங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களை தேசிய தலைவர் ஜே.பி நட்டா தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தேசிய செயற்குழுக் கூட்டத்தில் ஏற்பாடு செய்துள்ள கண்காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆறு முக்கிய அம்சங்களை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில், புராதான கலாச்சார மறுசீரமைப்பு என்ற தலைப்பில், காசி விஸ்வநாதர் கோவில், மகா காலேஸ்வரர் கோவில், அயோத்தி ராமர் கோவில் ஆகியவற்றின் புனரமைப்புகள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை எவ்வாறு உலகின் தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வந்தார் என்பது குறித்த காட்சிகளும் தத்ரூபமாக கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
கூட்டத்துக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெகாசஸ் ,ரஃபேல் ஒப்பந்தம், பண மோசடி தொடர்பாக பல்வேறு இடங்களில் நடைபெறும் அமலாக்க துறை சோதனை உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர் மோடி மீது அவதூறு கருத்துகளை பரப்ப எதிர்கட்சிகள் முயன்றதாகவும் ஆனால் அவை எத்தகைய ஆதாரமும் இல்லாததால் தோல்வியடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இதேபோல கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, இந்த ஆண்டு நடைபெறக்கூடிய ஒன்பது மாநிலத் தேர்தல்கள் பாஜகவுக்கு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்தார்.ஒன்பது மாநிலங்களிலும் வெற்றியை உறுதி செய்ய தேசிய செயற்குழுவை அவர் கேட்டுக் கொண்டார். மேலும் கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்த, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும், அதன் மூலம் 2024 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியமைப்பதை உறுதிப்படுத்தவும் அவர் வலியுறுத்தினார்.அண்மையில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 இடங்களில் 150 இடங்களை பெற்ற பாஜக அசாதாரணமான மற்றும் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் தோல்வி அடைந்திருந்தாலும், வாக்கு வித்தியாசம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
முன்னதாக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனது காரில் வந்த பிரதமர் மோடியை சாலையின் இருபுறங்களிலும் நின்ற பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.