நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன் கர்நாடகா உள்பட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் நடக்க உள்ளன. இந்த தேர்தல்களை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் பாஜக முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் தலைநகர் டெல்லியில் மாநகராட்சி கவுன்சில் கூட்ட மண்டபத்தில் நேற்று தொடங்கியது. இதனையொட்டி பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் பட்டேல் சவுக் பகுதியில் இருந்து நாடாளுமன்ற சாலை வரையில் மெகா பேரணியும் நடந்தது. அப்போது சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பின், பிரதமர் மோடி குத்து விளக்கேற்றி தேசிய செயற்குழு கூட்ட நிகழ்வை தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்ற கட்சி கூட்டத்தில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டாவின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பது எனவும் அவரது தலைமையில் மக்களவை தேர்தலை எதிர்கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2024 மக்களவைத் தேர்தலில் முந்தைய தேர்தல்களை விட அதிக தொகுதிகளில் பாஜக அபார வெற்றி பெறும் எனத் தெரிவித்தார். 2024ம் ஆண்டு பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வந்து நாட்டை வழிநடத்துவார் எனவும் கூறினார்.
2020ம் ஆண்டு பாஜக தேசியத் தலைவராக நட்டா பொறுப்பேற்றதாகவும், அச்சமயத்தில் கொரோனா தொற்று பரவினாலும் பாஜக குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார். கொரோனா தொற்று சமயத்தில் ஜே.பி நட்டா தலைமையின் கீழ், பாஜகவினர் பல்வேறு சேவைகளை புரிந்ததாகவும் அவர் கூறினார்.ஜேபி நட்டா தலைமையில் பாஜக பூத்தில் தொடங்கி அனைத்து மட்டங்களிலும் சேவையையே மையமாக கொண்டு செயல்பட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.