நாளை ஆங்கில வருடப் பிறப்பு நிகழ்வதை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு புத்தாண்டும் நமக்கு ஒரு புதிய உத்வேகத்தையும், புதிய நம்பிக்கையையும், கொடுக்கத் தவறுவதில்லை. புத்தாண்டில் புதிய முயற்சிகளை, புதிய திட்டங்களை, புதிய சிந்தனைகளை, புதிய சாதனைகளை படைக்க அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஆண்டு நம் நாட்டைப் பொறுத்தவரையில், ஒரு வெற்றிகரமான ஆண்டாகத்தான் அமைந்திருந்தது. கொரோனா என்ற கொடும் தொற்றின் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் உலக நாடுகள் அத்தனையும் தவித்துக் கொண்டிருந்தபோது, நம் பாரத தேசம்ஞ் தொழில், வணிகம், கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் என்று பல்வேறு துறைகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டது.
கொரோனா தொற்று ஏற்படுத்திய சமூக, சமுதாய பாதிப்பினால் மக்கள் துன்பப்படாத வண்ணம், புனரமைப்பு ஆண்டாக, மறு சீரமைப்பு ஆண்டாக, மீட்டெடுப்பு ஆண்டாக கடந்த 2022 ஆம் ஆண்டு அமைந்திருந்தது.
இப்போது பிறக்கும் 2023 ஆம் ஆண்டு நம்பிக்கையூட்டும் ஆண்டாக அமையட்டும். மத்திய அரசின் மகத்தான திட்டங்கள், மாநிலத்தின் மூலை முடுக்கில் இருக்கும் கடைக்கோடி மனிதனுக்கும் சென்று கிடைக்கட்டும்.
“வையத் தலைமை கொள்” என்று தேசிய கவி பாரதி கண்ட கனவை, நனவாக்கிக் கொண்டிருக்கும் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியில், பாரத தேசமெங்கும் அமைதி நிலவட்டும், மகிழ்ச்சி பெருகட்டும், சுகாதாரம் நிலைக்கட்டும். “ஒரே பாரதம் உன்னத பாரதம்” வையத் தலைமை கொள்ளட்டும். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும், அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பிலும், அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.