மைசூரில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ள 28 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூரில் இயங்கி வரும் இந்திய தொல்லியல் துறை அலுவலகத்தில்,
இருந்து 28,000 தமிழ் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளை சென்னையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்துக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு உத்தரவிட்டது
இதனையடுத்து கல்வெட்டுகளை மாற்றும் பணி கடந்த 2022 ஜனவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது .இந்நிலையில் சென்னை தொல்லியல் துறை அலுவலகத்தில் இந்த கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளை பாதுகாக்க போதுமான அடிப்படை வசதிகளை அமைத்து தர பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மைசூரிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள செப்பேடுகள் வெப்பத்தால் பாதிக்கப்படும் என்றும் வெப்பநிலை அதிகரித்தால் அவை உடைய வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தவிர்க்க சென்னையில் போதுமான கட்டுமான வசதிகளை செய்து தர வேண்டும் அல்லது வெப்பம் குறைவாக உள்ள தமிழகத்தின் வேறு பகுதியில் உள்ள தொல்லியல்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமெனகேட்டுக் கொண்டுள்ளார்.