மின்கம்பியில் ஊசலாடும் உயிர்கள்; சாராய விற்பனையில் கண்ணும் கருத்துமாக உள்ள அமைச்சர்

காலநிலை பாராது பொதுமக்களுக்காக இரவு பகலாக உழைக்கும் மின்வாரிய ஊழியர்களுக்கு திறனற்ற திமுக அரசு கொடுக்கும் பரிசு பாதுகாப்பற்ற பணிச் சூழல் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , காலநிலை பாராது பொதுமக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் மிக முக்கியமானவர்கள் எனத் தெரிவித்துள்ளார். பெருமழைக் காலங்களிலும்,கடும் புயல் காலங்களிலும், மின் தடையை உடனுக்குடனே சரி செய்து, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்கிறவர்கள் மின் துறை ஊழியர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த தன்னலமற்ற மின் துறை ஊழியர்களுக்கு, திறனற்ற திமுக அரசு கொடுக்கும் பரிசு பாதுகாப்பற்ற பணிச் சூழல் எனவும் சாடியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மின் துறை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, மின்சார விபத்தில் மரணமடைந்த மின் துறை ஊழியர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியடைய வைக்கிறது என்றும் ஆளுங்கட்சிக்கோ, சாராய அமைச்சருக்கோ, மின் துறை ஊழியர்களைப் பற்றிய அக்கறையோ கவலையோ இல்லை எனவும் வசைபாடியுள்ளார்

அதேசமயத்தில் மின்துறை ஊழியர்கள் பற்றி பொதுமக்கள் கவனத்துக்குக் கொண்டு வருவதும், அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கடமையாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார்.கடந்த சில மாதங்களில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல், திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த மின் வாரிய ஒயர்மேன் குமணன், நாகை மாவட்ட மின் ஊழியர் சிவசங்கரன், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவைச் சேர்ந்த மின் ஊழியர் வெங்கடேசன், காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதி மின் ஊழியர் பக்கிரிசாமி, ஜோலார்பேட்டை மின் ஊழியர் முருகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் மட்டுமல்லாது, மேலும் பல மின் ஊழியர்களும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்தத் துயரமான சம்பவங்கள் எல்லாம், நாளிதழ்களில் ஒரு நாள் செய்தியாகவே கடந்து செல்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். மின்சாரத் துறைக்கும் பொறுப்பான சாராய அமைச்சரோ, இது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், சாராய விற்பனையில் மட்டுமே முழுக் கவனமும் செலுத்தி வருவதாகவும் சாடியுள்ளார்.

மேலும் மின் துறையில் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பு என்பது மிக முக்கியமான தேவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மின்துறை ஊழியர்களின் பணிச் சூழலை அவ்வப்போது கவனமாக ஆய்வு செய்து, அனைத்து வகையான மின் ஆபத்துகள், வெள்ளம் மற்றும் உயர் மின்னழுத்த பகுதிகளைச் சுற்றியுள்ள மின் கம்பங்களில் பணிபுரிவதால் ஏற்படும் ஆபத்து, சரியான பாதுகாப்பு உபகரணங்கள் அணியாததால் ஏற்படும் அபாயம் குறித்து அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் ஊழல் இல்லாமல் தரமான மின் பொருள்களைக் கொள்முதல் செய்வதும் மின்சாரத்தால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

உடனடியாக சாராய அமைச்சர் தனது தூக்கத்திலிருந்து விழித்து, மின் துறை ஊழியர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


மேலும் அவர்களுக்குத் தேவையான தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் பராமரிப்புப் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடும்போது, மின் துறைப் பொறியாளர்கள் உடனிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மின் ஊழியர்களின் பணிச் சூழல் பாதுகாப்பில் தொடரும் அலட்சியப் போக்கை நிறுத்திவிட்டு, “2020, தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்

இனியும் மின் துறை ஊழியர்களின் உயிர்களோடு விளையாடும் அமைச்சரின் அலட்சியப் போக்கு தொடருமானால், தமிழக பாரதிய ஜனதா கட்சி அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top