‘கோவில் நிதியில் நடத்தப்படும் கல்லுாரிகளில், ஹிந்து ஆன்மிக கல்வி கற்றுத் தரப்பட வேண்டும்’ என, பா.ஜ.கவின் மகளிரணி தேசிய தலைவியும், கோவை தெற்கின் சட்டமன்ற உறுப்பினருமான வானதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கோவில்கள் சார்பில் கல்லுாரிகள், பள்ளிகள் துவங்கப்படுவதை பா.ஜ.க வரவேற்கிறது. ஆனால், கோவில்கள் சார்பில் துவங்கப்படும் கல்வி நிலையங்கள், அரசின் மற்ற கல்லுாரிகளைப் போல மதச் சார்பற்றதாக இருக்க கூடாது. எந்த கோவில் சார்பில் கல்லுாரி துவங்கப்படுகிறதோ, அதில் அந்த கோவில் தொடர்புடைய சம்பிரதாயம் கற்பிக்கப்பட வேண்டும்.
உதாரணமாக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியில் துவங்கப்பட்டுள்ள கல்லுாரியில், பட்டப்படிப்புடன் சைவ சித்தாந்தம் பற்றிய பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். தமிழகத்தில் பல சைவ ஆதினங்கள் நடத்தும் கல்லுாரிகள் அப்படித்தான் நடக்கின்றன. அதுபோலவே, கோவில் நிதியில் நடத்தப்படும் கல்லுாரிகளும் நடத்தப்பட வேண்டும். மதச் சின்னங்கள் அணிந்து வருவதையும், பாரம்பரிய ஆடைகள் அணிந்து வருவதையும் ஊக்கப்படுத்த வேண்டும்.
இப்படி நடத்துவது கடினம் என மதச்சார்பற்ற அரசு நினைத்தால், கோவில் நிதியில் நடத்தப்படும் கல்லுாரிகளை, பல நூற்றாண்டுகளாக செயல்படும் ஆதினங்கள், மடங்களிடம் ஒப்படைக்கலாம். அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளை, அறநிலையத் துறை நடத்துகிறது.
அர்ச்சகராக ஆறு மாதங்கள், ஓராண்டு என, குறுகிய கால படிப்புகள் போதாது. எனவே, அறநிலையத் துறை சார்பில் அர்ச்சகர் பயிற்சி கல்லுாரிகளை துவங்க வேண்டும். இதில், 6ம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்பு வரை, வழக்கமான கல்வியுடன் ஹிந்து மதம், ஆகமம், வேதங்கள், பன்னிரு திருமுறைகள், திவ்யபிரபந்தம் ஆகியவையும் கற்றுத் தரப்பட வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.