வாகனங்களில் ‘ஃபாஸ்டேக்’ வசதி வாயிலான சுங்கக் கட்டண வசூல் கடந்த ஆண்டில் 46 % அதிகரித்து ரூ.50,855 கோடியை எட்டியுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) தெரிவித்துள்ளது.
ஃபாஸ்டேக் வாயிலான பணப் பரிவா்த்தனை எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டில் 219 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் 324 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது வரை ஒட்டுமொத்தமாக 6.4 கோடி ஃபாஸ்டேக் வில்லைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஃபாஸ்டேக் வசதியுடன் செயல்படும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை கடந்த 2021-ஆம் ஆண்டில் 922-ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் 1,181-ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 323 சுங்கச் சாவடிகள் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கடந்த ஆண்டில் சுங்கக் கட்டணம் மூலமாக வசூல் செய்யப்பட்ட தொகை குறித்த விவரங்களை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன்படி, ஃபாஸ்டேக் வாயிலான வருவாய் ரூ.50,855 கோடியாக உள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டில் அந்த வருவாய் ரூ.34,778 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டில் அது 46 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதியில் இருந்து ஃபாஸ்டேக் வாயிலாக சுங்கக் கட்டணம் செலுத்தும் நடைமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கியது. அதன் காரணமாக சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசலும் வாகனங்கள் காத்திருக்கும் நேரமும் பெருமளவில் குறைந்துள்ளது. ஃபாஸ்டேக் வில்லை இல்லாத வாகனங்கள் அபராதமாக இருமடங்கு சுங்கக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.
மோடி அரசு அனைத்துதுறைகளிலும் வளர்ச்சியினை சமச் சீராக முன்னெடுத்துவருகிறது. நாட்டின் முக்கியமான நகரங்களின் சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பல்வேறு புதுமைகளை நெடுஞ்சாலைத்துறையில் அறிமுகம் செய்து வருகிறார். சாலைகள் அமைப்பதில் கின்னஸ் சாதனை, ஒரு நாளைக்கு 40 கி. மீ வரையிலான சாலைகளை அமைத்து சாதனை என நெடுஞ்சாலைத்துறை பல முக்கிய சாதனைகளை நிகழ்த்திவருகிறது.
ஏற்கனவே ஜிஎஸ்டி மூலம் வரி வசூல் மோசடிகளை தவிர்த்த மோடி அரசு, தற்போது ஃபாஸ்டேக் மூலம் வாகன சுங்கக் கட்டண வரி வசூல் மோசடியையும் தடுத்து இருக்கிறது. டிஜிட்டல் இந்தியாவின் சாதனைகளில் இதுவும் ஒன்று.