இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது இந்தியாவின் உதவிக்கு, இலங்கை மக்கள் சார்பாகவும், அதிபர் சார்பாகவும் நெகிழ்ச்சியான நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி ” இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டுள்ளது. எனினும் தற்போது இந்த நெருக்கடியில் இருந்து நாங்கள் ஓரளவு மீண்டுள்ளோம். இதற்கு மிக முக்கிய காரணம் பாரத அரசின் உதவிதான். இது மிகைப்படுத்தும் வார்த்தை அல்ல. அத்தியாவசியப் பொருட்கள், மனிதாபிமான உதவிகள் என பல்வேறு வகைகளில் சுமார் 4 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 33,000 கோடி) அளவுக்கு இந்தியா இலங்கைக்கு உதவியது.
இந்த உதவிதான் இலங்கை தற்போது ஓரளவு மீண்டதற்கு மிக முக்கிய காரணம். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் அளிக்கவும் இந்தியா அளித்த உத்தரவாதம்தான் காரணம். யாரும் எங்களுக்கு உத்தரவாதம் அளிக்க முன்வராத நிலையில், இந்தியாதான் முதன்முதலாக இலங்கைக்கு உத்தரவாதம் அளித்தது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய அரசுக்கும் அதன் மக்களுக்கும் இலங்கை அதிபர் சார்பிலும் இலங்கை மக்கள் சார்பிலும் மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார்.
அதன்பிறகு பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ”பொருளாதார நெருக்கடியில்இருந்து இலங்கை மீண்டுவர எவ்வாறு எல்லாம் உதவ முடியுமோ அதை எல்லாம் பாரதம் சற்றும் தாமதிக்காமல் உடனடியாகச் செய்தது. இலங்கைக்கு உதவும் மற்ற நாடுகளின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக நாங்கள் காத்திருக்கவில்லை. இலங்கைக்கு கடன் அளிக்கும் விவகாரத்தில், சர்வதேச அமைப்புகள் தயக்கமின்றி கடனுதவி அளித்து இலங்கையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று பாரதம் விரும்புகிறது” என தெரிவித்தார்.
நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரின் இலங்கை விஜயத்தில் ராஜ தந்திரம் இருப்பதாகவும், சீனாவின் பிடியில் இருந்து இலங்கையை மீட்டு இந்தியாவிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவார் எனவும் உலக ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.