74வது குடியரசு தின விழா கோலாகலம்; தேசிய கொடியை ஏற்றினார் திரெளபதி முர்மு

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி கடமை பாதையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்றது. சென்டிரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையின் வழியே வீரர்கள் வீர நடைபோட்டு பவனி வந்தனர். விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, முன்னதாக இந்தியா கேட் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் கடமை பாதை விஜய் சவுக் ஜனாதிபதி மாளிகை சந்திப்பு பகுதிக்கு வருகை தந்தார். இதனை தொடர்ந்து கடமையின் பாதைக்கு வருகை தந்த குடியரசுத் தலைவரை பிரதமர் மோடி வரவேற்றார்.

பின்னர், டெல்லி கடமை பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

ஜனாதிபதி கொடி ஏற்றி கொடிவணக்கம் செலுத்தியவுடன் குடியரசு தின அணிவகுப்பு தொடங்கியது. குடியரசு தின நிகழ்ச்சியில் எகிப்து அதிபர், அப்தெல் ஃபடா எல் சிசி கலந்து கொண்டார்.

திரெளபதி முர்மு கொடியை ஏற்றி வைத்ததும் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கிய அணிவகுப்பு விஜய் சவுக், இந்தியா கேட், செங்கோட்டை வரை நடைபெற்றது. முப்படைகளுடன் குதிரைப்படை மற்றும் ஒட்டகப் படையும் அணிவகுப்பில் கலந்து கொண்டன. கடற்படையில் 3 பெண் அதிகாரிகள் 6 அக்னி வீரர்கள் உள்பட 144 இளம் மாலுமிகள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

17 மாநிலங்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் அலங்கார ஊர்திகள், குழந்தைகளின் கலாச்சார நிகழ்ச்சிகள், மோட்டார் சைக்கிள் சாகசங்களும் நடைபெற்றன. நாடு முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

தமிழ்நாட்டின் சார்பில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் என்ற தலைப்பில் அலங்கார ஊர்தி பங்கேற்றது. இதில் ஒளவையார், வேலுநாச்சியார், முத்துலட்சுமி ரெட்டி உள்ளிட்டோரின் உருவங்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும் தஞ்சை பெரிய கோவிலின் மாதிரியும் அலங்கார ஊர்தியில் இடம் பெற்றிருந்தது. குடியரசு தின நிகழ்ச்சியில் இந்த ஆண்டு பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலத்தின் தலைப்பாகை மற்றும் துண்டை அணிந்திருந்தார். அவரது இந்த தலைப்பாகை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top