தமிழ்நாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இருப்பு சற்றே வலிமையானதாகும். இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தவுடன், பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தும் துணிச்சல் இதற்கு இருந்தது என ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் :
“புதிய இந்தியாவின் எழுச்சியை விரும்பாமல் சில புற அழுத்தங்களும் உள்ளார்வக் குழுக்களும்
உள்ளன. பிரிவினை மற்றும் கற்பனைச் சிக்கல்களை உருவாக்கியும் உயர்த்திப் பிடித்தும் இவை நம்முடைய வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்க முயல்கின்றன. நம்முடைய சமூக-இன- மத மற்றும் வட்டார நல்லிணக்கங்களைச் சிதைப்பதற்கு இவை கங்கணம் கட்டிக்கொண்டது போன்று உள்ளன. இவற்றில் சில அமைப்புகள், பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபடுகின்றன. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எனும் இயக்கம், இப்படிப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்.
இந்த அபாயகர அமைப்புக்கு வெளியிலிருந்து நிதி கிடைக்கிறது. சர்வதேச பயங்கரவாத அமைப்புகளோடு இதற்குத் தொடர்புகளும் உள்ளன. துரதிருஷ்டவசமாக, தமிழ்நாட்டில் இந்த அமைப்பின் இருப்பு சற்றே வலிமையானதாகும். இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தவுடன், பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தும் துணிச்சல் இதற்கு இருந்தது என்பதை நாம் அறிவோம். கோயம்புத்தூரில் நிகழவிருந்த மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதல் தடுக்கப்பட்டாலும்கூட, சர்வதேச பயங்கரவாதிகளோடு இந்த அமைப்புக்கு தொடர்பு இருக்கிறது என்பதை அந்தச் சம்பவம் உறுதிப்படுத்துகிறது. பயங்கரவாதச் செயல்பாடுகள் குறித்த தகவல்களோ, செய்திகளோ தெரிந்தால் அல்லது சந்தேகம் ஏற்பட்டால், சட்ட முகமைகளுக்கு உடனடியாகத்
தெரியப்படுத்த வேண்டும்” என்றார். ஆளுநர் தொடர்ந்து, இந்த அமைப்பு குறித்தும் அதன் அச்சுறுத்தல் குறித்தும் பேசி வருகிறார். தமிழகத்தில் இந்த அமைப்பு சற்றே வலிமையாக இருப்பது என்பது இந்த அரசின் அரவணைப்பில் பயங்கரவாத அமைப்புகள் சுதந்திரமாக இயங்குவதையே ஆளுநர் உரை உணர்த்துகிறது.