தமிழர்களை வடமாநிலத்தினர் விரட்டும் ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக பகிரப்பட்டு வருவதாக, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம், திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில், நுாற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத்தினர் வேலை செய்து வருகின்றனர். ‘தமிழர்களை, வடமாநிலத்தினர் அடித்து விரட்டுகின்றனர்’ என, நேற்று முன்தினம் வீடியோ ஒன்று பரப்பப்பட்டது.
வேலம்பாளையம் போலீசார் விசாரித்தனர். இரு தரப்புக்கு ஏற்பட்ட பிரச்னையில் எடுக்கப்பட்ட வீடியோ, தற்போது தவறான கருத்துக்களோடு பகிரப்பட்டு வருவது தெரிந்தது. இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று காலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பனியன் நிறுவனம் அமைந்துள்ள பகுதி மற்றும் சுற்று வட்டாரத்தில் போலீசார் தடுப்பு அமைத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வீடியோவை தவறாக சமூக வலைதளத்தில் பரப்பி, பதட்டத்தை உருவாக்கியவர்கள் மற்றும் இருதரப்பு பிரச்னை குறித்து மாநகர போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த, 14ம் தேதி, அனுப்பர்பாளையம் பனியன் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர், வெளியில் உள்ள
டீக்கடைக்கு சென்றார். அங்கு அமர்ந்திருந்த இருவர் சிகரெட் பிடிக்கும் புகை பட்டபோது, இருதரப்பிற்கும் சிறிய பிரச்னை ஏற்பட்டது. அதில், வடமாநில தொழிலாளியை, இருவரும் தாக்க முயன்றனர். அவர் தன் நண்பர்களை அழைத்து வந்தார். இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கலைந்தனர். இது தொழில் போட்டியோ, வேலைவாய்ப்பு சம்பந்தமாகவோ, முன்விரோதம் காரணமாகவோ ஏற்பட்ட பிரச்னையில்லை. தற்செயலாக நடந்த பிரச்னை. முழுமையான விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அன்றைய தினம் எடுக்கப்பட்ட வீடியோ, 26ம் தேதி நடந்ததாகவும், பனியன் நிறுவனத்தில் வேலை செய்யும் தமிழர்களை வடமாநிலத்தினர் விரட்டுவதாகவும் சமூக வலைதளத்தில் தவறாக பகிரப்பட்டு வருகிறது.
தவறானவற்றை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து அரசியல் செய்யலாம், ஆதாயம் பெறலாம் என திட்டமிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொய்யை பரப்பி, கலவரத்தை தூண்ட முயற்சித்தார். இந்நிலையில் இன்று திருப்பூர் மாநகர காவல் துறை அதிகாரிகள் இது உண்மைக்கு புறம்பான வீடியோ என தெரிவித்துள்ளனர். நடந்த சம்பவம் பற்றி சரியான புரிந்துணர்வு இல்லாமல் ஜன.14ல் எடுக்கபட்ட வீடியோ ஜன.26ல் வைரல் ஆனது கூட தெரியாமல் இந்தியாவிற்குள் வாழும் குடிமக்களுக்குள் பிரிவினையை விதைத்து வடக்கன், தமிழன், தெலுங்கன் என தொடர்ந்து பிரிவினை அரசியலை செய்து வன்முறையைத் துண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக வேல்முருகன் மீது தேசியவாதிகளும், உண்மையினை புரிந்துகொண்டவர்களும் கண்டித்து வருகின்றனர்.