உலகம் வியக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு, நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் போன்றது – பிரதமர் மோடி புகழாரம் !

கடந்த 2014 முதல் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிறன்று மன் கி பாத் (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் (29.01.2023) இந்த ஆண்டிற்கான முதல் “மனதின் குரல்” நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இதோ…….

மனதின் குரல்மன் கி பாத்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இது 2023ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல், மேலும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 97ஆவது பகுதியும் இதுவாகும். உங்களனைவரோடும் மீண்டும் ஒருமுறை உரையாடுவதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒவ்வொர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் கணிசமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த மாதம் சுமார் 14ஆம் தேதி வாக்கில், வடக்கு முதல் தெற்கு வரையும், கிழக்குத் தொடங்கி மேற்கு வரையும், நாடெங்கிலும் பண்டிகைகளின் ஒளி பளிச்சிட்டு வந்தது. இதன் பிறகு தேசம் தனது குடியரசுத் திருநாள் கொண்டாட்டங்களில் திளைத்தது. இந்த முறையும் கூட, குடியரசுத் திருநாள் கொண்டாட்டத்தின் பல பரிமாணங்களுக்குப் பல பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன. ஜைஸால்மேரிலிருந்து புல்கித் என்பவர் எழுதியிருக்கிறார், ஜனவரி 26ஆம் தேதியன்று நடந்த அணிவகுப்பின் போது, கர்த்தவ்ய பத்தினை ஏற்படுத்திய தொழிலாளர்களைக் காண்பது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக எழுதியிருக்கிறார். அணிவகுப்பில் இடம் பெற்ற காட்சிகளில் பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பார்த்து ஆனந்தப்பட்டதாக கான்பூரைச் சேர்ந்த ருயா அவர்கள் எழுதியிருக்கிறார். இதே அணிவகுப்பில், முதன்முறையாகக் கலந்து கொண்ட ஒட்டகச்சவாரி செய்யும் வீராங்கனைகள் பிரிவும், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரின் பெண்கள் பிரிவும் நிறைய பாராட்டுக்களைப் பெற்றன.

நண்பர்களே, தெஹ்ராதூனைச் சேர்ந்த வத்சல் அவர்கள், ஜனவரி 25ஆம் தேதிக்காகத் தான் எப்போதுமே காத்திருப்பதாக எழுதியிருக்கிறார். ஏனென்றால் அந்த நாளன்று தான் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவதாகவும், அதே போல, ஜனவரி 25ஆம் தேதி மாலையே கூட, ஜனவரி 26ஆம் தேதிக்கான உற்சாகத்தை அதிகரித்து விடுவதாகவும் எழுதியிருக்கிறார். கள அளவில் தங்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் சேவை உணர்வால் சாதனைகளைப் புரிவோருக்கு மக்களின் பத்ம விருதுகள் தொடர்பாக பலர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த முறை பத்ம விருதால் கௌரவிக்கப்படுவோரில், பழங்குடியினத்தவர்களும், பழங்குடியினத்தவர் வாழ்க்கையோடு தொடர்புடைய நபர்களுக்குமான நல்ல சிறப்பான பிரதிநிதித்துவம் இருக்கிறது. பழங்குடியினத்தோரின் வாழ்க்கை, நகரங்களின் வாழ்க்கையோட்டத்திலிருந்து வேறுபட்டது, அதற்கென சவால்கள் பிரத்யேகமாக இருக்கின்றன. இவற்றைத் தாண்டியும், பழங்குடியினங்கள், தங்கள் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதில் எப்போதுமே முனைப்பாக இருக்கின்றார்கள். பழங்குடி சமூகங்களோடு இணைந்த விஷயங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் மீது ஆய்வுகள் மேற்கொள்ளவும் முயற்சிகள மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைப் போலவே T டோடோ, ஹோ, குயி, குவி, மாண்டா போன்ற பழங்குடி மொழிகளின் மீதான பணிகளில் ஈடுபட்டு வரும் பல பெரியோருக்கு பத்ம விருதுகள் கிடைத்திருக்கின்றன. இது நம்மனைவருக்குமே பெருமையளிக்கும் விஷயம். தானீராம் T டோடோ, ஜானும் சிங் சோய், பீ. ராமகிருஷ்ண ரெட்டி அவர்களின் பெயர், இப்போது நாடு முழுவதும் அறியப்படும் பெயர்களாக கௌரவிக்கப்படும். சித்தி, ஜார்வா, ஓங்கே போன்ற பழங்குடியினத்தவரோடு இணைந்து பணியாற்றியவர்களும் இந்த முறை கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஹீராபாயி லோபீ, ரத்தன் சந்த்ர கார், ஈஸ்வர் சந்திர வர்மா அவர்களைப் போல. பழங்குடியினச் சமூகங்கள் நம்முடைய பூமி, நமது மரபுகள் ஆகியவற்றின் பிரிக்கமுடியா அங்கங்களாக இருந்து வந்துள்ளார்கள். தேசம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்தில் அவர்களின் பங்களிப்பு மிகவும் மகத்துவம் வாய்ந்தது. அவர்களுக்காக செயலாற்றுவோருக்கு தரும் மரியாதை, புதிய தலைமுறைகளை உத்வேகப்படுத்தும். நக்சல்வாதம் பாதித்திருக்கும் பகுதிகளிலும் கூட, இந்த ஆண்டு பத்ம விருதுகளின் எதிரொலி ஓங்கி ஒலிக்கின்றது. தனது முயற்சிகள் வாயிலாக, நக்சல்வாதம் பாதித்த பகுதிகளில் வழிதவறிப் போன இளைஞர்களுக்கு சரியான பாதையைக் காட்டியுதவியவர்களுக்கு பத்ம விருதுகள் அளித்து கௌரவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக காங்கேரில் மரத்தில் வேலைப்பாடு செய்யும் அஜய் குமார் மண்டாவீ, கட்சிரௌலீயின் பிரசித்தமான ஜாடீபட்டீ ரங்கபூமியோடு தொடர்புடைய பரசுராம் கோமாஜீ குணே ஆகியோருக்கும் இந்த கௌரவம் கிடைத்திருக்கிறது. இதைப் போலவே வட கிழக்கில் தங்களுடைய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் இணைந்திருக்கும் ராமகுயிவாங்கபே நிஉமே, விக்ரம் பஹாதுர் ஜமாதியா, கர்மா வாங்சூ ஆகியோரும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நண்பர்களே, இந்த முறை பத்ம விருதுகளால் கௌரவிக்கப்படுவோரில் பலர் இடம் பெற்றிருக்கிறார்கள்,; இவர்கள் இசையுலகை நிறைவடையச் செய்திருக்கிறார்கள். யாருக்குத் தான் இசை பிடிக்காது!!அனைவருக்கும் பிடித்தமான இசை வேறுவேறாக இருக்கலாம், ஆனால், சங்கீதம் என்பது அனைவரின் வாழ்க்கையின் அங்கமாகவே இருக்கிறது. இந்த முறை பத்ம விருதுகளைப் பெறுவோரில், சந்தூர், பம்ஹும், த்விதாரா போன்ற நமது பாரம்பரியமான வாத்தியக் கருவிகளின் இசையைப் பொழிவதில் பாண்டித்தியம் பெற்றோரும் உண்டு. குலாம் மொஹம்மத் ஜாஸ், மோஆ சு-போங்க், ரீ-சிம்ஹபோர் குர்கா-லாங்க், முனி-வேங்கடப்பா, மங்கல் K காந்தி ராய் போன்ற பல நபர்களின் பெயர்கள், நாலாபுறங்களிலும் பேசப்பட்டு வருகின்றன.

நண்பர்களே, பத்ம விருதுகளைப் பெறும் அநேகம் நபர்கள், நமக்கு மத்தியிலிருந்து வரும் இந்த நண்பர்கள், எப்போதும் தேசத்தை அனைத்திற்கும் மேலாகக் கருதியவர்கள், தேசமே முதன்மை என்ற கோட்பாட்டிற்காகத் தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்தவர்கள். அவர்கள் சேவையுணர்வால் தங்கள் பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள், இதற்காக அவர்கள் என்றுமே விருதுகளை வேண்டவுமில்லை, விரும்பவுமில்லை. யாருக்காக அவர்கள் தங்கள் பணிகளை ஆற்றுகின்றார்களோ, அவர்களின் முகங்களில் இருக்கும் சந்தோஷம் மட்டுமே இவர்களுக்கு மிகப்பெரிய விருதுகள். இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு கொண்டவர்களை கௌரவப்படுத்துவதில், நாம் நாட்டுமக்களின் கௌரவத்தை அதிகப்படுத்துகிறோம். பத்ம விருதுகளின் வெற்றியாளர்கள் அனைவரின் பெயர்களையும் என்னால் இந்த சந்தர்ப்பத்தில் கூற முடியாமல் இருக்கலாம்; ஆனால் உங்களனைவரிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் பத்ம விருதுகளைப் பெற்ற பெரியோரின் கருத்தூக்கமளிக்கும் வாழ்க்கை தொடர்பான விஷயங்களைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top