‘போலீஸ் துறையினரின் மன உறுதியை குறைக்கும் வகையில், அவதுாறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
முன்னதாக போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து காவல் ஆய்வாளரை ஒருமையில் தவறாக பேசியதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்த அவரை திறந்த காரிலே ஏற்றிக் கொண்டு ஊர்வலமாக சென்ற வி.சி.கே கட்சியினர் ஒட்டுமொத்த காவல் துறையையும் அசிங்கப்படுத்தும் விதமாக மோசமாக கோஷமிட்டு சென்றனர். இதைக் கண்டித்துதான் பாஜக தலைவர் அண்ணாமலை கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். போலீஸ் துறையினர் தங்கள் பணியை செய்ததற்காக, அவர்கள் மாண்பை குறைப்பது போல், ‘காவல் நாய்களே, எச்சைப் பிழைப்பு’ போன்ற கோஷங்களை எழுப்புவது, காக்கி சட்டைக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்பதை, அரசியல் கட்சிகள் உணர வேண்டும். ஓரிரு போலீசார் செய்யும் தவறுகளுக்கு, ஒட்டு மொத்த போலீஸ் துறையினரையும் அவதுாறாகப் பேசுவது ஏற்க முடியாதது. தங்கள் உயிரை துச்சமாகக் கருதி, மக்களைக் காக்க உழைக்கும் போலீஸ் துறையினரை, தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும், அரசியல் காரணங்களுக்கும், இது போன்று அவதுாறாகப் பேசுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.போலீஸ் துறையினரின் மன உறுதியை குறைக்கும் வகையில், கோஷங்களை எழுப்பும் தங்களது கூட்டணி கட்சியினர் மேல், போலீஸ் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.