அவதூறு பரப்புபவர்களுக்கு பதில் தந்து நேரத்தை வீணடிக்காதீர்கள் – அண்ணாமலை அறிவுரை

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியையும், மாநிலத் தலைவர் அண்ணாமலை வளர்ச்சியையும் சகித்துக் கொள்ள முடியாதவர்கள் தொடர்ந்து கட்சிகுறித்தும், மாநிலத் தலைவர் குறித்தும் அவதூறுகளை சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வேளையில் மாநிலத் தலைவர், அவர்களுக்கு எல்லாம் பதில் கொடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பலரின் தியாகத்தாலும், பலரின் அயராத உழைப்பாலும் வளர்ந்த நமது கட்சி, விமர்சனங்களுக்கு அஞ்சுவதா? விமர்சனங்கள் நமது கட்சியின் வளர்ச்சிக்கான உரம். ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள், அவதூறுகளை ஒதுக்கி தள்ளுங்கள். சமீப காலமாக என் மீது சமூக வலைத்தளங்களில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நமது கட்சியின் சகோதர சகோதரிகளும் தன்னார்வலர்களும் மிக ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றி வருவதாக அறிகிறேன். கட்சியின் தொண்டர்களும் தன்னார்வலர்களும் தங்களது சமூக வலைத்தளங்களில் எதிர்வினையாற்றும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
உங்களுக்கு பதில் அளிக்க தெரியாது என்பது பொருள் அல்ல. சில விமர்சனங்களுக்கு காத்திருந்து பதில் அளிப்பதை காட்டிலும் கடந்து செல்வதே ஆகச் சிறந்தது. மக்கள் பணியில் நாட்டம் கொண்டு, பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வரும் நீங்கள், நமது கட்சியின் முன்னாள் உறுப்பினர்களுக்கோ, எதிர்கட்சியினரின் வீண் விமர்சனங்களுக்கோ அல்லது சில பல சமூக வலைதள பரப்புரையாளர்களுக்கோ செவி சாய்க்காமல், உங்கள் தொகுதியில் நமது கட்சியின் வளர்ச்சிக்கு பங்காற்றுங்கள். விஷமத்தனமான கருத்துக்களைப் பரப்பி உங்கள் கவனத்தை சிதறடிப்பதுதான் சமூக வலைதள
பரப்புரையாளர்களின் முழு நேர வேலை. நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

நமது கருத்தில் ஆழம் உள்ளபோது அவதூறுகளுக்கு அவசியம் ஏற்படாது. என் மேல் தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர்.

சில பத்திரிக்கைகள் என்னைப் பற்றி அவதூறு பரப்பினால் தான் அவர்களின் பிழைப்பு நடக்கும் என்ற நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பயந்தால், என்னுடைய கிராமத்தில் நான் ஒடுங்கி கிடக்க வேண்டியதுதான். அதைதான் அவர்களும் விரும்புகிறார்கள் என்பதையும் நான் அறிவேன். நமது செயல்பாடுகள் அவதூறு பரப்புவோருக்கு எரிச்சல் தருமேயானால், நாம் சரியான திசையில் பயணிக்கிறோம் என்பதையே அது வெளிக்காட்டுகிறது.
உங்கள் கருத்தை முன்வைக்க தயங்காதீர், பகிரங்கமாக உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்! அதே சமயம், அவதூறு பரப்புவதையே முழு நேர பணியாக கொண்டு இயங்கி வரும் சிலருக்கு பதில் அளித்து உங்கள் நேரத்தை வீணடிக்காமல் கடந்து செல்ல கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top