பாரத பிரதமர் நரேந்திர மோடி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மக்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது என்று தெரிவித்த 24 மணி நேரத்திற்குள் இந்தியாவின் பேரிடர் மீட்புக்குழு மற்றும் உபகரணங்கள் அடங்கிய 2 வது விமானமும் இன்று (07.02.2023) மாலை துருக்கி சென்றடைந்தது; இந்திய மீட்பு குழுக்கள் தற்போது களத்தில் உள்ளன.
ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ‘இந்திய எரிசக்தி வாரம் 2023’ நிகழ்ச்சியை பெங்களூருவில் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”துருக்கியில் நேரிட்ட நிலநடுக்கத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. துருக்கியின் அண்டை நாட்டையும் இந்த நிலநடுக்கம் பாதித்துள்ளது. இந்த சூழலில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்தியாவின் 140 கோடி மக்களின் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது” என தெரிவித்தார்.
துருக்கியின் தென் மத்திய பகுதியில் நேற்று (06.02.2023) அதிபயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 வரை பதிவான இந்த நிலநடுக்கங்களில் இதுவரை 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். இடிந்து விழுந்த கட்டிடங்களில் இன்னும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டிவிடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் முதல் கட்ட நிலநடுக்க நிவாரணப் பொருட்கள் விமானம் மூலம் துருக்கிக்குப் புறப்பட்டு விட்டதாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்தது. “முதல் தவணையாக மருத்துவப் பொருட்கள், இடிபாடுகளை அகற்றுவதற்கான துளையிடும் கருவிகள் ஆகியவற்றுடன் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்” என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். இந்த நிலநடுக்கத்தால் அண்டை நாடான சிரியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. பாரதத்திற்கு எதிராக செயல்படும் நாடு துருக்கி. பாகிஸ்தானுடன் சேர்ந்துகொண்டு பாரதத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. இங்குள்ள இஸ்லாமிய இளைஞர்களை கல்வி சுற்றுலா என அழைத்துச் சென்று பயங்கரவாதத்தை போதிக்கிறது. எனினும், உலகனைத்தும் ஒரு குடும்பம் என கருதும் பிரதமர் மோடி, இந்த நேரத்தில் துருக்கிக்கு உதவி செய்ய முன் வந்துள்ளதை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். பாகிஸ்தானின் இந்திய விரோத கருத்துக்களை ஆதரித்த துருக்கி, உலக அரங்கிலும் இந்தியாவை பலமாக எதிர்த்து வந்த நாடு. அதன் அண்டை நாடான சிரியா ஐ.எஸ்.ஐ.எஸ் மூலம் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேலை செய்து வந்த நாடு. இந்தியாவை எதிரியாக பார்த்த அந்த நாடுகளுக்கு எவ்வித தயக்கமும் இன்றி உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது மோடியின் தலைமையிலான இந்தியா. முதல் மீட்புக்குழு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்தக் குழுவும் சென்று சேர்ந்துள்ளது.