பெங்களூருவில் எலகங்கா விமானப்படை தளத்தில்1 14வது சர்வதேச விமான கண்காட்சி இன்று தொடங்கியது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, பெங்களூரு வானம் புதிய இந்தியாவின் திறனுக்கு சாட்சியாக உள்ளதாக தெரிவித்தார்.
பெங்களூரு ஏலகங்கா விமானப்படை தளத்தில் விமானப்படை கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், இன்றைய தினம் இந்தியா புதிய உயரங்களை தொட்டு அதனையும் தாண்டி செல்வதாக கூறினார்.
இந்த விமானப் படை கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றிருப்பது சர்வதேச நாடுகளுக்கு இந்தியாவின் மீதான நம்பிக்கை பன்மடங்கு அதிகரித்திருப்பதை காட்டுவதாகவும் கூறினார்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், ஏரோ இந்தியா, ஒரு கண்காட்சி மட்டுமே என கருதப்பட்ட காலம் இருந்ததாகவும் தற்போது அது மாறி இருப்பதாகவும் தெரிவித்தார்
தற்போது இது வெறும் கண்காட்சியாக மட்டும் இல்லாமல், இந்தியாவின் பலம் கூடுவதை காட்டுவதாக உள்ளதாகவும் கூறினார். சர்வதேச நாடுகளுக்கு தற்போது இந்தியா வெறும் சந்தையாக மட்டும் இல்லாமல், ஒரு பாதுகாப்பு கூட்டாளியாகவும் உள்ளதாகவும் தெரிவித்தார்
இளைஞர்கள் தங்களது தொழில்நுட்ப திறன்களை பயன்படுத்தி இந்தியாவின் பாதுகாப்பு துறையை பலப்படுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ள இந்திய நிறுவனங்கள், தங்களது அதிநவீன தொழில்நுட்பத்தை காட்சிபடுத்தியுள்ளன. ஏர்பஸ், போயிங், டசால்ட் ஏவியேசன், லாக்கீட் மார்டின், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீ, பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன. வரும் 17ம் தேதி வரை 5 நாட்களுக்கு கண்காட்சி நடைபெற உள்ளது.