இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்களின் மதிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் 2.58 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என மத்திய ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்களின் மதிப்பு குறித்த விபரங்களை, ராணுவ இணை அமைச்சர் நேற்று (10.02.2023) சமர்ப்பித்தபோது அவர் கூறியதாவது: ‘கடந்த 2019 – 20ம் நிதியாண்டில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்களின் மதிப்பு, 79 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.
இது, 2020–2021ல் 85 ஆயிரம் கோடி ரூபாயாகவும், 2021 – 22ல், 95 ஆயிரம் கோடி ரூபாயாகவும் அதிகரித்தது.இதையடுத்து, கடந்த மூன்று நிதி ஆண்டுகளில், இதன் மொத்த மதிப்பு, 2.58 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
நாட்டில், ராணுவ தளவாட பொருட்களின் உற்பத்தி சூழலை ஊக்குவிக்கும் வகையில், தமிழகம் மற்றும் உத்திர பிரதேசத்தில் இரண்டு ராணுவ தொழிலக பெருவழித் தடங்களை நம்
அரசாங்கம் நிறுவி உள்ளது.
இதையடுத்து, ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்வதைக் குறைப்பதில் கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு, இவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், ராணுவ தளவாட உற்பத்தியில், 1.75 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என பேசினார்.