சமீபத்தில் பிரதமர் தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில்கள் தொடர்ந்து சில விஷமிகளால் குறி வைத்து தாக்கப்படுகின்றன.
இது தொடர்பாக தெற்கு மத்திய ரயில்வேயின் சி.ஆர்.பி.ஓ ராகேஷ் விளக்கம் அளித்துள்ளார். கடந்த (15.01.2023) மகர சங்கராந்தியை முன்னிட்டு செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே இயங்கி வரும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், தெலுங்கானாவின் மஹபூபாபாத் புறநகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதலுக்கு உள்ளானது. செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் . இந்த தாக்குதலில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சி 4 பெட்டியின் கண்ணாடி ஜன்னல் சேதமடைந்தது.
இந்த சம்பவம் பற்றி தெற்கு மத்திய ரயில்வேயின் சி.ஆர்.பி.ஓ ராகேஷ் பேசியதாவது “இது தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். வந்தே பாரத் ரயில் தாக்கப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம், பீகாரின் கதிகாரில் நியூ ஜல்பைகுரி ஹோவார் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கற்கள் வீசப்பட்டன. இந்த தகவல் கிடைத்ததும் ரயில்வே காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கல் வீச்சு சம்பவத்தின் போது பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், விரைவு ரயில் தொடங்கப்பட்ட 4 நாட்களில் மால்டா
ரயில் நிலையம் அருகேயும் இதேபோன்ற சம்பவம் பதிவாகியுள்ளது” எனவும் கூறினார். பிரதமர் மோடியின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சில
அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களால் இந்த தொடர் தாக்குதல் திட்டமிடப்பட்டு இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.