பத்திர பதிவுத்துறை தமிழ்நாட்டில் அதிக பணம் புழங்கும் துறையாக உள்ளது. டாஸ்மாக்கிற்கு அடுத்த படியாக பணம் ஈட்டி தரும் இந்த துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு 10 முதல் 12% வரை வருமானம் கிடைக்கிறது. திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு அரசின் கஜானாவிற்கு மட்டுமல்லாமல், கட்சி கஜானாவிற்கும் பணம் நிரப்பும் துறையாக இந்த துறை மாற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக பதிவுத்துறை அலுவலகங்களில் உதவியாளர், சார் பதிவாளர் நிலை அலுவலர்கள், மாவட்ட பதிவாளர்களை பயன்படுத்தி பத்திரம் பதிய வருபவர்களிடம் காசை கறக்கின்றனர். இதற்காக தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலகங்களில் இடமாற்றம் செய்யபப்ட்ட பணியாளர்கள் அயல்பணி என்ற பெயரில், பழைய அலுவலகங்களிலேயே பணியாற்றி இவ்வாறு கையூட்டு பெறுவது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு கையூட்டு பெறும் பணத்தில் திமுக அரசியல்வாதிகளுக்கும், துறையின் அமைச்சர் மூர்த்திக்கும் பங்கு செல்வதாக கூறப்படுகிறது. சொத்து ஆவணங்களை பதிவு செய்ய வருபவர்களிடம் குறைந்தது மூவாயிரம் ரூபாயில் தொடங்கி பல ஆயிரம் ரூபாய்களை லஞ்சமாக பெறுவதாகவும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. 10 மாதங்களுக்கு முன்பாகவே இந்த விவகாரம் தொடர்பாக தனிபிரிவு குற்ற புலனாய்வு துறை, அறிக்கையாக சமர்பித்த நிலையில் இதுவரை அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெயரளவுக்கு மட்டும் பதிவுத்துறை தலைவருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, ஆயிரம் அதிகாரிகளின் பெயர்களுடனான அறிக்கையை அண்மையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஊடகங்கள் முன்பு வெளிப்படுத்தினார். தமிழ்நாடு அரசுக்கு 15 நாட்கள் அவகாசம் தருவாதகவும், அதற்குள் லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், ஊழல் அதிகாரிகளின் பெயர்களை நோட்டீஸ் அடித்து ஒட்டுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பதிவுத்துறை அலுவலகங்களில் பாஜக சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.