ரைசினா மாநாடு என்ற பெயரில் கடந்த 2016ம் ஆண்டு முதல் இந்தியா ஆண்டுதோறும் சர்வதேச நாடுகள் பங்கேற்கும் மாநாட்டை நடத்தி வருகிறது. இந்தியா முன்னெடுத்து நடத்தும் இந்த மாநாட்டில் 90 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வர்.
இந்நிலையில் 3 நாட்கள் நடைபெறும் 8வது ரைசினா மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலானி இந்த மாநாட்டை துவக்கி வைக்கிறார். இதற்காக டெல்லி வந்த அவருக்கு, குடியரசு தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி அவரை நேரில் வரவேற்றார். இதனை தொடர்ந்து டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு சென்ற மெலானி, அங்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அரசியல், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் சுகாதாரம், தூதரக மற்றும் கலாசார விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பை தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மெலானி, உலகளவில் அனைவராலும் நேசிக்கப்படும் தலைவராக பிரதமர் மோடி விளங்குவதாகவும், உக்ரைன் போர் பேச்சுவார்த்தையை எளிதாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகிறோம் என்றும் தெரிவித்தார். மேலும், இந்தியா- இத்தாலி இடையேயான உறவை மேலும் பலப்படுத்துவதே எங்கள் நோக்கம் எனவும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, பயங்கரவாதம், பிரிவினைவாதத்திற்கு எதிராக இந்தியா, இத்தாலி தோளோடு தோள் நிற்கும் என தெரிவித்துள்ளார். உக்ரைன் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றும், இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தித் துறையில் இரு நாடுகளுக்கும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.