வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனையை ஆரம்பம் முதலே தவறாக கையாண்டு வரும் திமுகவுக்கு அறிவுரை கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை பொறுத்து கொள்ள முடியாத திமுக அரசு அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் திறனற்ற திமுக அரசின் இந்த அராஜகத்தை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டு திமுகவை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்திற்கு பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமை வகித்தார், மாநிலத் துணைத் தலைவர்கள் நாராயணன் திருப்பதி, மற்றும் டால்பின் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பல பாஜக நிர்வாகிகள் திமுக அரசை கண்டித்து உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு பேசியதாவது: அண்ணாமலை மீதான பயத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு வழக்கு பற்றி எதுவும் தெரியாது என திமுகவினர் நினைக்கின்றனர். அவர் சட்டத்தை படித்துவிட்டு தான் அரசியலில் நுழைந்திருக்கிறார். அடுத்த தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியும் என்றால் அது பா.ஜ.க மட்டும்தான்.
வட மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு புத்தியே இல்லை என்று தி.மு.க அரசின் முக்கிய நிர்வாகிகள் பேசி இருக்கிறார்கள். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவும், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் இந்தியாவின் அடுத்த பிரதமராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்கள். இதனால் கற்பனையில் மிதக்கும் ஸ்டாலின், திடீரென வடமாநில தொழிலாளர்கள் மீது அக்கறை வந்தது போல நடிக்கிறார். மடியில் கனம் இருந்தால்தான் நெஞ்சில் பயம் இருக்கும். ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பா.ஜ.க.வுக்கு மட்டும்தான் இருக்கிறது.
பிரதமர் மோடி ஒவ்வொரு முறை பேசும்போதும் தமிழ் மண், தமிழ் மொழி, தமிழ் மக்கள் என மனதார பேசுகிறார். ஆனால் தி.மு.க. அரசோ இந்தி திணிப்பு என்ற பிரச்சினையை உருவாக்கி மக்களை திசை திருப்ப பார்க்கிறது. கர்நாடகாவில் இந்தி கற்றுக்கொள்பவர்கள் 65,000 பேர். கேரளாவில் இந்தி கற்றுக்கொள்பவர்கள் 21,000 பேர். ஆனால் தமிழ்நாட்டில் இந்தி கற்றுக்கொள்ள பதிவு செய்திருப்பவர்கள் 2,35,000 பேர். தமிழ்நாட்டு முதல்-அமைச்சருக்கு பிரதமர் ஆகும் கனவு இருந்தால் அவருக்கு இந்தி டியூஷன் எடுக்க நான் தயாராக இருக்கிறேன். தமிழகத்தில் 2026-ல் பாஜக தான் ஆட்சி அமைக்கும். ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது. என்று கூறினார்.