”கேரளாவின் அமைதிக்கு காரணம் நாங்கள்” – திருச்சூரில் அமித் ஷா முழக்கம்

ஒட்டுமொத்த உலகமும் கம்யூனிஸ்டுகளை நிராகரித்துவிட்ட நிலையில், தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள கம்யூனிஸ்ட்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

கேரளாவின் திருச்சூரில் நேற்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது: மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கேரளா அரசியலில் எதிரெதிராக இருக்கும் போது தங்கள் இருப்பை கட்டுவதற்காகவே வடகிழக்கு மாநில திரிபுரா தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்டனர். இருந்தாலும் திரிபுரா மக்கள் அவர்களை ஏற்கவில்லை. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ததன் மூலம் அதன் வன்முறையில் இருந்து கேரளா விடுவிக்கப்பட்டுள்ளது. இதை பாஜக அரசு செய்தது. ஆனால், கம்யூனிஸ்டுகளோ, காங்கிரசோ இதை வரவேற்கவில்லை. அவர்கள் அமைதியாக இருந்ததற்கு காரணம், ஓட்டு வங்கி அரசியல் தான். ஆனால், பாஜக ஓட்டு வங்கி அரசியல் செய்வதில்லை. அந்த அமைப்பு வன்முறையில் ஈடுபட்டும், நாட்டுக்கு எதிராக செயல்பட்டும் வந்தது. அதன் காரணமாகவே அதற்கு தடை விதிக்கப்பட்டது.

கேரளாவில் உள்ள வாக்காளர்கள் நீண்ட காலமாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு ஆட்சி செய்ய வாய்ப்பு அளித்து வருகின்றனர். இருப்பினும், ஒட்டுமொத்த மக்களும் மறதியில் தள்ளும் வேளையில் புறக்கணிப்பின் விளிம்பில் காங்கிரஸ் உள்ளது. அதே சமயம், ஒட்டுமொத்த உலகமும் கம்யூனிஸ்டுகளை நிராகரித்துவிட்டது. தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள கம்யூனிஸ்ட்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது, அதே நேரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டிய தீவிரவாதம் தலைவிரித்தாடியது. அந்த சூழலில் வாக்கு அரசியலுக்காக காங்கிரஸ் மௌனமாக இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டங்கள் தரம் தாழ்ந்துவிட்டன. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசுகிறார். நான் ராகுல் காந்திக்கு ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் மோடியை திட்ட திட்ட அவர் மதிப்பு கூடும்; நீங்கள் திட்ட திட்ட தாமரைகள் வளர்ந்து கொண்டே இருக்கும். கேரள மக்கள் வன்முறையையும் ஏற்க மாட்டார்கள்; கம்யூனிஸ்ட்டுகளின் வன்முறை அரசியலையும் ஏற்க மாட்டார்கள். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் கேரள மக்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதன் மூலம் கேரளாவிலும் ஒட்டுமொத்த நாட்டிலும் வளர்ச்சியைப் பார்க்க முடியும்” என தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top