பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் விருதுநகர் உள்பட நாடு முழுவதும் 7 இடங்களில், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில் முதலாவதாக விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு விருதுநகர் ஒருங்கிணைந்த ஜவுளி மைய பணிகளை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சுதந்திரம் பெற்று 75 ஆவது ஆண்டில் இருக்கிறோம். கொரோனா மற்றும் ஐரோப்பாவில் நடைபெறும் போரினால், உலக அளவில் பொருளாதார பாதிப்பு இருக்கும் நிலையில் 5 வது இடத்தில் இந்திய பொருளாதாரம் உள்ளது. உலகமே எதிர்பார்க்கும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார்.
அடுத்த 25 ஆண்டுகள் இந்தியா வளர்ச்சியை நோக்கி செல்லும். இந்தியாவின் முதல் ஜவுளி பூங்கா திட்டத்தை விருதுநகருக்கு ஒதுக்கியதற்கு பிரதமருக்கு நன்றி. தமிழகம் மீது பற்று கொண்டவர், தமிழ் கலாச்சாரம், பண்பாடு மீது மிகுந்த பற்று கொண்டவர் பிரதமர் மோடி.
தமிழ்மொழி மூத்த மொழியாக இருப்பது குறித்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அடுத்து சௌராட்டிர சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. உலக அளவில் காஞ்சிபுரம் பட்டு சேலை பலரும் விரும்பக் கூடியது. ஜவுளி பூங்கா அமைக்க பல்வேறு மாநிலங்கள் ஆர்வம் காட்டின.
ஆனால் இதில் தமிழ்நாட்டுக்கு முதல் இடமாக கிடைத்துள்ளது. இந்த பூங்கா அடிக்கல் அமைக்கும்போது விருதுநகரில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் நானும், பிரதமரும் கூட நேரில் வர ஆர்வமாக உள்ளோம். மேலும் ஆண்டாள் அருளை பெற ஆர்வமாக உள்ளோம். நாட்டில் 4 கோடி பேர் நேரடியாகவும், 6 கோடி பேர் மறைமுகமாகவும் ஜவுளி துறையில் வேலை செய்து வருகின்றனர். விளை நிலத்தில் இருந்து தொழிற்சாலை, நூல், வடிவமைப்பு, ஆடைகள், ஏற்றுமதி என்று அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு இடத்தில் கிடைக்கும் வகையில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுகிறது. பிஎம் மித்ரா திட்டத்தின் மூலமாக 20 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். இந்த துறையில் ரூ.70 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.