அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் பல்வீர் சிங், வழக்கு ஒன்றுக்காக காவல்நிலையம் வந்தவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அம்பாசமுத்திரம் சிவந்திபுரத்தை சேர்ந்த செல்லப்பா, மாரியப்பன் உள்ளிட்ட சிலர் வழக்கு ஒன்றுக்காக காவல்நிலையம் வந்துள்ளனர்
அவர்களை காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங், கொடூரமாக தாக்கியுள்ளார். வாயில் ஜல்லிக்கற்களை வைத்து திணித்து கன்னம் மற்றும் தலையில் தாக்கியதுடன், ஜல்லிக்கற்களை கொண்டு பற்களையும் உடைத்துள்ளார்
மேலும், புதிதாக திருமணமான இளைஞர் ஒருவரின் அந்தரங்க உறுப்பையும் குரூரமாகத் தாக்கியதில் அவர் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுளளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்தினர். இதையடுத்து இந்த சம்பவம் பூதகரமாகியுள்ளது. பல்வேறு தரப்பினரும் காவல்துறைக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல்துறையினர் இந்த அராஜக செயலை கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், குற்றம் எதுவாக இருந்தாலும், விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளார்.
பாதுகாவலாக இருக்க வேண்டிய காவல்துறையிடமிருந்தே பொதுமக்கள் பாதுகாப்பு தேடும் அவலம் மிகவும் வருந்தத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கும் காவல் நிலைய மரணங்களால், பொதுமக்கள், காவல்துறை மீது நம்பிக்கை இழந்து வரும் நிலையில், இது போன்ற மனிதத் தன்மையற்ற தாக்குதல்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக அரசு உடனடியாக தகுந்த விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், குற்றம் செய்தவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, காவல் துறைக்கு அறிவுறுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.