பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ராகுல்காந்தி, தற்போது மன்னிப்பு கேட்க மாட்டேன் என பாசாங்கு செய்வதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியின் நற்பெயரை கெடுக்க ராகுலால் ஒருபோதும் முடியாது எனவும் அவர் கூறினார்
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை அவதூறாக பேசியதால் நீதிமன்றத்தால் ராகுல்காந்தி தண்டிக்கப்பட்டார். இதையடுத்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் அல்ல என்றும் காந்தி குடும்பம் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலடி தந்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடி மீது அவதூறுகளையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். ஆனால் அவர் ஒரு போதும் தன்னுடைய வார்த்தைகளை தான் இட்ட கையெழுத்துடன் ஒப்பிட்டு பார்த்ததில்லை.
உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட மனிதர் ஒருவர், இப்போது தான் ஒன்றும் கோழையில்லை என பாசாங்கு செய்கிறார்.
ஒரு தனிநபரை அவமதித்ததற்காக ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்படவில்லை. ஒட்டுமொத்த ஓபிசி சமுதாயத்தை அவமதித்ததற்காக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தான் செய்த தவறுக்காக ஓபிசி சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்கும் மனநிலை கூட இல்லை என்பது காந்தி குடும்பத்தின் அரசியல் ஆணவத்தின் மற்றொரு வெளிப்பாடு.
பழங்குடியின இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் குடியரசு தலைவராக பொறுப்பேற்ற போது, காங்கிரஸ் கட்சியினர் இதேபோன்று அவரை அவமதித்தனர். ராகுல்காந்தி பிரதமர் மோடியின் மீதான நன்மதிப்பை கெடுக்க தொடர்ந்து முயற்சிக்கிறார். எனினும் அவர் தொடந்து தோல்வியை தழுவி வருகிறார். பிரதமர் மோடி மக்களின் தலைவராக மாறியுள்ளதால், ராகுல்காந்தியின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது எனத்தெரிவித்தார்.
இந்நிலையில் ராகுல்காந்தி எம்பிகளுக்கான குடியிருப்பை காலி செய்யக் கோரி, நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்மிருதி இரானி, அந்த வீடு ராகுல்காந்திக்கு சொந்தமானது அல்ல என்றும், சாதாரண பொதுமக்களுக்கு சொந்தமானது என்றும் தெரிவித்தார்.